Supreme Court NEET: நீட் தேர்வுக்கு எதிரான மனுக்களை, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.
நீட் தேர்வு சர்ச்சை:
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதியன்று, நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமையால நடத்தப்பட்டது. அப்போதே அதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வினாத்தாள் கசிந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ஜுன் 4ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த கருணை மதிப்பெண்கள் சர்ச்சையை கிளப்பியது. ஒரு தேர்வு மையத்தில் ஒரே அறையில் அடுத்தடுத்து அமர்ந்திருந்த 5-க்கும் மேற்பட்டோர், முழு மதிப்பெண்கள் பெற்றது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.
தீவிர விசாரணையும், கலந்தாய்வு ஒத்திவைப்பும்:
தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் வலுத்தன. ஆரம்பத்தில் மோசடிகளை மறைத்தாலும், பின்பு சில இடங்களில் தவறுகள் நடந்து இருப்பதாக மத்திய கல்வி அமைச்சரே ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, வினாத்தாளை கசியவிட்டதாக ஆங்காங்கே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குஜராத்தில் ஒரு தனியார் பள்ளி தாளாளரும் கைது செய்யப்பட்டார். தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் கசியவிட்டது, தேர்வுக்கு பிறகு மாணவர்களுக்காக தேர்வு நிலைய அதிகாரிகளே விடைத்தாளை நிரப்பியது போன்ற பல்வேறு மோசடிகளும் அம்பலமாகின. மோசடிகளுக்கு லட்சங்கள் தொடங்கி, கோடிகள் வரை பணம் கைமாறியது. இந்த சூழலில் தான், கடந்த 6ம் தேதி தொடங்கவிருந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, குறிப்பிட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை தேசிய தேர்வு முகமை திரும்பப் பெற்றது. அவர்களுக்கு மறுதேர்வும் நடத்தப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை:
இந்நிலையில் தான் பல்வேறு மோசடிகள் நடந்து இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் மற்றும் நீட் தேர்வை முற்றிலும் ஒழிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் உடன் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடு தொடர்பாகவும் கேள்வி எழுப்பி, 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், நீட் தேர்வில் பெரிய அளவிலான மோசடிகள் எதுவும் நடைபெறவில்லை என மத்திய அரசும், தேர்வை ரத்து செய்தால் திறமையான மாணவர்களுக்கான வாய்ப்பு பாதிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமையும் மனுதாக்கல் செய்துள்ளன. இந்நிலையில் இந்த மனுக்கள் மீது, தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரணை நடத்த உள்ளது. நீட் தேர்வுக்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இந்த வழக்கு விசாரணை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.