மும்பையில் பூ விற்பனை செய்து வந்த மாணவிக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் பிஎச்.டி படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் சரிதா மாலி (28). இவரது தந்தை சாலையோரத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். பள்ளிக்காலத்தில் இருந்தே தந்தைக்கு உதவியாக இருந்த வந்த சரிதா, பூக்களை மாலையாக கட்டிக்கொடுத்து தந்தையுடன் சேர்ந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில், இந்தியில் முதுகலை பட்டம் பெற்ற சரிதா அதில் எம்.பில்., மற்றும் ஆராய்ச்சி படிப்பும் படித்து முடித்துள்ளார்.இந்த நிலையில்தான் தற்போது சரிதா மாலிக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை கழகத்தில் பிஎச்.டி படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
கஷ்டங்களை மட்டும்தான் சந்தித்து இருக்கிறேன்
இது குறித்து சலிதா மாலி கூறும் போது, “ என்னுடைய வாழ்கையில் கஷ்டங்களைத்தான் அதிகமாக சந்தித்து இருக்கிறேன். சிறுவயதில் இருந்தே பூக்களுடன்தான் வாழ்ந்து வருகிறேன். பள்ளி மாணவியாக இருந்த போதிலிருந்தே தந்தைக்கும் உதவியாக பூ வியாபாரம் செய்து வந்தேன். நேரு பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு சேர்ந்த பின் விடுமுறையில் வீட்டுக்கு வரும் போது, பூ வியாபாரம் செய்து வந்தேன். எனக்கு இரண்டு மூத்த சகோதரிகள் இரண்டு தம்பிகள் உள்ளன்ர். என் படிப்புக்கு தந்தை எந்த தடையும் விதிக்க வில்லை. இப்போது அமெரிக்காவில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் படித்து முடித்த பின், குடும்ப முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்” என்று பேசியுள்ளார்.