நாட்டில் ஆண் கைதிகளுக்கும், பெண் கைதிகளுக்கும் தனித்தனியே சிறைச்சாலைகள் உள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்பவர்களுக்கான தண்டனையை அனுபவிக்கும் இடமாக மட்டுமின்றி, அவர்கள் மாறும் இடமாகவும் சிறைச்சாலை இருக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.


சிறையில் எஃப்.எம்.:


கைதிகள் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கும் பொருட்டு, சிறைகளிலும் பல புத்தாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையில் உள்ள சிறையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. மும்பையில் உள்ள பைகுல்லா மகளிர் சிறை.


இந்த சிறையில் பல்வேற தண்டனைக்கு ஆளான மகளிர் கைதிகள் உள்ளனர். இந்த நிலையில், அவர்களது வாழ்வில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் சிறையின் உள்ளே எஃப். எம். தொடங்கியுள்ளனர். அந்த மாநிலத்தில் சிறைவாசிகளுக்காக சிறைவாசிகளே நடத்தும் எஃப். எம். தொடங்கப்படுவது இது முதன்முறை அல்ல. ஏற்கனவே மகாராஷ்ட்ராவில் புனே எரவாடா மத்திய சிறை, நாக்பூர் மத்திய சிறை, அமராவதி மத்திய சிறை மற்றும் கோல்கபூர் மத்திய சிறையில் சிறைவாசிகளே எஃப். எம். நடத்தி வருகின்றனர்.


ஆர்.ஜே.வான கைதிகள்:


ஆனால், அந்த மாநிலத்தில் மகளிர் சிறைச்சாலையில் எஃப்.எம் எனப்படும் பண்பலை தொடங்கப்படுவது இதுவே முதன்முறை ஆகும். இந்த சிறையில் தொடங்கப்பட்டுள்ள பண்பலை முழுவதும் சிறைவாசிகளாலே நிர்வகிக்கப்படுகிறது. அவர்களே ஆர்.ஜே. எனப்படும் தொகுப்பாளர்களாக இந்த பண்பலையில் பணியாற்றுகின்றனர்.


இதன்மூலம் சிறைவாசிகள் தங்களது மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும் என்றும், சிறைத்தண்டனை முடிந்து விடுதலையான பிறகு புதிய வாழ்க்கையை தொடங்க கைகொடுக்கும் என்றும் சிறை நிர்வாகத்தினர் நம்புகின்றனர். சிறைவாசிகளை மன அமைதிப்படுத்தும் விதமாக இந்த பண்பலை மூலம் ஏராளமான ஆன்மீக நிகழ்வுகளும், பக்தி பாடல்களும் ஒளிபரப்பப்படுகிறது. மேலும் திரைப்பட பாடல்களும் அவ்வப்போது ஒலிபரப்பப்படுகிறது.


மேலும், இந்த பண்பலை மூலம் சட்டம் தொடர்பாகவும் பல்வேறு விஷயங்களும் கைதிகளுக்கு கற்றுத்தரப்படுகிறது. இதனால் அவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் தவறு செய்யாமல் இருக்க உதவும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  மேலும், மகாராஷ்ட்ரா சிறைத்துறை தலைவரான அமிதாப் குப்தா வருங்காலத்தில், சிறைகளில் கைதிகளின் மறுவாழ்விற்கு ஏராளமான காரியங்கள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள சிறைகளிலும் கைதிகள் மறுவாழ்விற்கு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: மாரடைப்பால் ஆசிரியர் மேல் சரிந்து விழுந்து 9ம் வகுப்பு மாணவன் பரிதாப மரணம் - ராஜஸ்தானில் சோகம்


மேலும் படிக்க:Sabarimala Mandala Puja: நாளை மறுநாள் மண்டல பூஜை; சபரிமலையில் குவியும் பக்தர்கள் - கட்டுப்பாடுகள் அறிவிப்பு!