மல்டிபிளக்ஸ் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதால், ஜம்மு காஷ்மீர் மக்கள் விரைவில் பெரிய திரையில் சினிமா பார்க்க உள்ளார்கள். 1990களில் சாதகமற்ற சூழ்நிலைகள் ஏற்பட்டதையடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன. இதையடுத்து முதல் முறையாக, திரையரங்குகளில் பெரிய திரையில் மக்கள் திரைப்படங்களைப் பார்க்க உள்ளனர்.
புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம், ஸ்ரீநகரில் ஐநாக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய திரையில் திரைப்படங்களை பார்த்து ரசிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய வகையில் மல்டிப்ளெக்ஸில் மூன்று பெரிய ஆடிட்டோரியங்கள் கட்டப்பட்டு வருவதாக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். பார்வையாளர்களுக்கு சிறந்த திரைப்பட அனுபவத்திற்காக சரவுண்ட் ஒலியை வழங்கும் டால்பி அட்மாஸ் டிஜிட்டல் ஒலி அமைப்புடன் ஆடிட்டோரியம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தை அமைக்கும் திட்டத்தின் தலைவர் விஜய் தர் கூறுகையில், "காஷ்மீருக்கு வெளியே உள்ள மாநிலங்களில் இளைஞர்களுக்கு சினிமா திரையரங்களில் கிடைக்கும் அதே வசதிகள் இங்கு கிடைக்க வேண்டும். 30 ஆண்டுகளாக இங்கு அப்படி எதுவும் இல்லை என்று பார்த்தோம். ஏன் இல்லை என்று நினைத்தோம்? எனவே இப்போதுதான் ஆரம்பித்துள்ளோம்.
ஜம்முவிலோ அல்லது நாட்டின் பிற நகரங்களிலோ சினிமாவில் கிடைக்கும் அதே வசதிகளை இங்கும் இளைஞர்கள் பெற வேண்டும்" என்றார். காஷ்மீர் மக்கள் பல ஆண்டுகளாக மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதைக் குறிப்பிட்ட விஜய் தர், மக்களுக்கு பொழுதுபோக்கிற்காக மல்டிபிளக்ஸ்கள் இருப்பது முக்கியம் என்றார்.
மல்டிப்ளெக்ஸானது 520 பேர் ஒன்றாக அமர்ந்து சினிமா பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மல்டிப்ளெக்ஸில் உணவு விடுதிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது, குழந்தைகளை ஈர்க்கும் இடமாக உள்ளது. விரைவில், பணிகளை முடிக்க பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சூழல் மாறிவருவதாக மத்திய அரசும் மோசமடைந்திருப்பதாக ஜம்மு காஷ்மீர் மாநில கட்சிகளும் தெரிவித்து வருகின்றன.