பஞ்சாப் மாநில தலைநகராக விளங்குவது சண்டிகர். சண்டிகரில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் மாணவிகள் விடுதி தனியாக இயங்கி வருகிறது.


இந்த நிலையில், இந்த பல்கலைகழகத்தில் பயிலும் மாணவிகள் ஏராளமானோர் குளிக்கும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்தது. சுமார் 60 மாணவிகள் குளிக்கும் வீடியோக்கள் இணையத்தில் திடீரென பரவியதால், மாணவிகள், மாணவிகளின் நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.






இந்த சம்பவத்தால், ஆத்திரமடைந்த சக மாணவிகள் நேற்று நள்ளிரவு பல்கலைகழக வளாகத்திற்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், மிகப்பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவிகளை சமாதானப்படுத்தினர்.


முதற்கட்ட விசாரணையில், பல்கலைகழக விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவரே சக மாணவிகள் குளியலறையில் குளிக்கும்போது ரகசியாக வீடியோவாக எடுத்துள்ளார் என்றும், அவர் அந்த வீடியோக்களை வேறு ஒரு நபருக்கு அனுப்பியபோது அந்த நபர் அந்த வீடியோக்களை இணையத்தில் கசிய விட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த மாணவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






இந்த சம்பவத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான 8 மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத்சிங் பைன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “ சண்டிகர் பல்கலைகழக மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகள் யாரும் தப்பிக்கமாட்டார்கள். நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் கண்ணியம் தொடர்பான விஷயம் இது. இது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம்.  ஊடகங்கள் உள்பட நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “ என்று பதிவிட்டுள்ளார்.






இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இணையத்தில் பரவிய வீடியோக்களை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் சிலர் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மாணவிகள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.