பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு சிவிங்கிப் புலிகள் இந்தியாவிற்கு வாங்கிவரப்பட்ட நிலையில் , நடிகர் பிரகாஷ் ராஜ் அதனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 


நேற்று ( சனிக்கிழமை ) பிரதமர் மோடியின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இந்தியாவில் கடந்த 1952ஆம் ஆண்டு நாட்டில் சிவிங்கிப் புலிகள் அழிந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு ’ப்ராஜக்ட் சீட்டா’ எனும் சிவிங்கிப் புலிகள் மறுஅறிமுகத் திட்டத்தின் மூலம்  நமீபியாவைச் சேர்ந்த 8 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்பட்டன. அதனை பிறந்த நாளன்று பிரதமர் மோடி மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் திறந்துவிட்டார். அப்போது அங்குள்ள புலிகளை அவர் புகைப்படம் எடுப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகின. இதனை வைத்து சிலர் மீம்ஸ்களை தயார் செய்து விமர்சனம் செய்து வந்த நிலையில் , அதனை பிரகாஷ் ராஜும் ரசித்தவர் போல தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.






இதனை தொடர்ந்து அடுத்த ட்வீட்டில் ” அன்புள்ள மேதகு தலைவரே ! இந்த சீட்டாஸை ( ஏமாற்றுக்காரர்களை) எப்போது பிடிக்கப்போகிறீர்கள் “ என கூறி , விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி ஆகியோரது புகைப்படங்களை பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.  இந்தியாவில் கிட்டத்தட்ட ரூ 9000 கோடி கடனை பெற்றுக்கொண்டு , இங்கிலாந்து தப்பிச்சென்றுவிட்டார் பிரபல கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா. அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான வழக்கு பல வருடங்களாக நடைப்பெற்று வருகிறது. அதே போல  ரூ 13,500 கோடி மோசடி வழக்கில் மெகுல் சோக்ஷியும் ,ரூ 11000 கோடி மோசடியில் அவரது மருமகன் நீரவ் மோடியும் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு இருக்கும் நிலையில் இருவரும் தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். 






இந்த நிலையில்தான் பிரகாஷ் ராஜ்  , வெளிநாட்டுகளில் இருந்து சீட்டாஸை ( சிறுத்தைகள் )இந்தியாவிற்கு கொண்டு வந்தது இருக்கட்டும் , இந்த சீட்டாஸ் (ஏமாற்றுக்காரர்களை ) எப்போது இந்தியாவிற்கு கொண்டு வரப்போகிறீர்கள் என்பது போல சாடியிருக்கிறார். நடிகர் பிரகாஷ் ராஜ் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக #justasking என்னும் தனித்துவமான ஹேஷ் டேக் மூலம் தனது விமர்சனங்களையும் , கேள்விகளையும் முன்வைத்து வருகிறார். அதே பாணியில்தான் தற்போது சீட்டாஸ் ட்வீட்டையும் தட்டிவிட்டிருக்கிறார். இதனை வரவேற்கும் விதமாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.