இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானி 1500 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை, தனது நிறுவன ஊழியர் ஒருவருக்கு பரிசாக வழங்கியுள்ளார்.


முகேஷ் அம்பானி:


இந்தியாவிலேயே பெரும் பணக்காரரான ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வெற்றி பெற்று வருகிறார். எரிபொருள் சுத்திகரிப்பு, ஆடைகள், தொலைதொடர்பு மற்றும் சில்லறை வணிகம் என அனைத்திலும் கோலோச்சி வருகிறார்.


தற்போதைய சூழலில் ரிலையன்ஸ் குழுமத்தின் சாதானங்களை பயன்படுத்தாத வீடே இந்தியாவில் இல்லை என்று தான் கூற வேண்டும். இவ்வாறு தனது தொழிலில் கிடைத்த வெற்றியின் மூலம் பிரபலமானதோடு, தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சரியான வசதிகளை ஏற்படுத்தி தருவதன் மூலம் நற்பெயர் பெற்றவர் முகேஷ் அம்பானி. அந்த வகையில் தான், தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவருக்கு முகேஷ் அம்பானி அளித்த பரிசு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


ரூ.1,500 கோடி மதிப்பிலான பரிசு:


இதுதொடர்பான தகவலின்படி, தனது நிறுவன ஊழியர் ஒருவருக்கு 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அந்த பயனாளியின் பெயர் மனோஜ் மோடி, இவர் முகேஷ் அம்பானியின் வலதுகரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ள  வீடானது,1.7 லட்சம் சதுர அடி பரப்பளவில் 22 மாடிகளைக் கொண்ட கட்டடம் என கூறப்படுகிறது. டாலட்டி &  பார்ட்னர்ஸ் எல்எல்பி எனும் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட இந்த வீடானது, மும்பையில் நேபியன் கடல் சாலையில் அமைந்துள்ளது. இந்த வீட்டிற்கான சில பொருட்கள் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


யார் இந்த மனோஜ் மோடி?


மனோஜ் மோடி கல்லூரியில் முகேஷ் அம்பானியுடன் சேர்ந்து படித்தவர் ஆவார். இவர்கள் மும்பை பல்கலைக்கழகத்தில் வேதியியல் தொழில்நுட்பத்தில் இவர்கள் ஒன்றாக பயின்றுள்ளனர்.  தொடர்ந்து, 1980களில் ரிலையன்ஸ் குழுமத்தை திருபாய் அம்பானி வழிநடத்தியபோது, அந்த நிறுவனத்தில் மனோஜ் மோடி ஊழியராக சேர்ந்துள்ளார். முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானியுடன் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பராக பழகியுள்ளார். தற்போது, முகேஷ் அம்பானியின் மகன்களான ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானியுடனும் மனோஜ் மோடி நெருக்கமாக பணியாற்றி வருகிறார்.


ரிலையன்ஸ் குழுமத்தில் முக்கிய பொறுப்பு:


ரிலையன்ஸ் குழுமம் பல பில்லியன் டாலர் மதிப்பிலான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட மனோஜ் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் மிகவும் எளிமையானவர் என கூறப்பட்டாலும்,  தொழில் விவகாரத்தில் மிகவும் கைதேர்ந்தவர் என கூறப்படுகிறது. தற்போது மனோஜ் மோடி ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.