இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,934 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 


24 மணி நேர பாதிப்பு:


இந்தியாவில் கடந்த புதன்கிழமை 8 மாதங்களில் இல்லாத அளவு தினசரி கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்தது. 12,591 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களாக சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,934 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 63,000 மாக குறைந்துள்ளது.  


இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு 4,43,11,078 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,31,345 ல் இருந்து 5,31,369 ஆக உயர்ந்துள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் சதவீதம் 98.67 சதவீதமாக பதிவாகியுள்ளது. இறப்பு விகிதமும் 1.18 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 16 பேர் இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 65,683 லிருந்து 63,380 ஆக குறைந்துள்ளது.


மாநில வாரியாக பாதிப்பு:


தொடர்ந்து இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 16,630 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் – 5776 பேர், தலைநகர் டெல்லியில் 5011 பேர், உத்திர பிரதேசத்தில் – 4689 பேர், தமிழ்நாடு – 3640 பேர், ஹரியானாவில் – 5226 பேர், குஜராத்தில் – 1826 பேர், ஹிமாச்சல் பிரதேசத்தில் – 1406 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தமாக 63,380 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 1,89,087 ஆர்டிபிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் பஞ்சாபில் 4 பேர், டெல்லியில் 3 பேர், கர்நாடகாவில் 2 பேர், மத்திய பிரதேசத்தில் 2 பேர், தமிழ்நாட்டில் ஒருவர் என மொத்தம் 24 பேர், டெல்லியில் 2 பேர், மகாராஷ்டிராவில் 2 பேர், தமிழ்நாட்டில் ஒருவர், என மொத்தம் 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மத்திய சிகாதார துறை தரவுகளின்படி, நாடு முழுவதும் இதுவரை 220.66 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறையும் தொற்று பாதிப்பு:


2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக தினசரி பாதிப்பு 4 லட்சம் கடந்து பதிவானது. இறப்பு விகிதமும் இரண்டாம் அலையில் அதிகரித்தது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படுத்துவது இல்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் தொற்று பாதிப்பும் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது. மேலும் முதியவர்கள், இணை நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவிறுத்தப்பட்டுள்ளது.