கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு எம்பிகள் அதிகளவில் சிபாரிசு செய்ய முடியாத சூழலில் ஏற்பட்ட கோபம்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது என பாஜக மூத்த தலைவர் சுசில்குமார் மோடி தெரிவித்துள்ளார்.


 கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளும் நடைபெறவில்லை. இந்தாண்டும் அவ்வாறு இருக்குமோ? என்பதற்கு ஏற்றால் போல் தான் சூழல் நிலவியது . இருந்தப்போதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும், சமூக இடைவெளியையும் முறையாகப் பின்பற்றி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அமைச்சரவைக்குழு அறிவித்தது. அதன்படி, கடந்த 29 ஆம் தேதி ஆரம்பித்த நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.  கொரோனா தொற்றின் தாக்கம் மற்றும் இந்தியா முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளை எப்படி சமாளிப்பது? எனவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு போன்ற மக்களின் அடிப்படை விஷயங்கள் குறித்தும் இந்த குளிர்காலக்கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தனர். அதிலும் தற்போது உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மக்களைக்கவரும் வகையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்நத முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருந்தப்போதும் எதிர்க்கட்சிகள் காஷ்மீரில் பொதுமக்கள் மீதான தாக்குதல், உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் கொலை செய்ததில் ஏற்பட்ட வன்முறை குறித்தெல்லாம் வலுவான கண்டங்களை எழுப்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.





இந்நிலையில் தான் நேற்று மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின் போது பேசிய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுசில்குமார் மோடி, நாடாளுமன்றத் தேர்தலில் ஏன் எம்பிகள் தோல்வியைச்சந்தித்தனர் என்பதற்கானக் காரணம் குறித்து பேசியிருந்தார். அப்போது, “இந்தியாவில் 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் ஒவ்வொரும் எம்பிக்கும் 10 மாணவர்களை மத்திய அரசால் நடத்தப்படும் சிபிஎஸ்சி பள்ளியான கேந்திரிய வித்யாலயாவில் மாணவர்களை சேர்ப்பதற்கு சிபாரிசு செய்யலாம். மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு படி எம்பிகளுக்கு மட்டும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் 7880 மாணவர்களை சேர்ப்பதற்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது குழந்தைகளை  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்ப்பதற்கு சிபாரிசு செய்யும் படி கோரிக்கை விடுக்கின்றனர்.


ஆனால் வெறும் 10 பேருக்கு மட்டுமே சிபாரிசு செய்ய முடியும் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மக்கள் கோபமடைகின்றனர். இதனால் அவர்கள் தேர்தலில் தோல்வியை அடைவதற்கு இதுவும் மிகப்பெரிய காரணமாக அமைகிறது” என பாஜக மூத்த தலைவர் சுசில்குமார் மோடி தெரிவித்துள்ளார். இதெல்லாம் ஒரு காரணமா? என்றும் பலர் பாஜக மூத்த தலைவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.