நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது. யுள்ளது. ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர். 


அதில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி முதுலிகா ராவத், ராணுவ வீரர்கள் லிட்டெர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவாக் சிங், ஜிதேந்தர் குமார், விவேக் குமார், சாய் தேஜா, சாத்பால், சவுஹான், குல்தீப், பிரதீப், தாஸ் ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் மட்டும் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார். 


மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையும் கருப்பு பெட்டியை தேடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வீரர்களின் உயிரிழப்புக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று டில்லியில் அவர்களின் இறுதிச்சடங்கு நடைபெறவிருக்கிறது. 




இந்நிலையில், பிபின் ராவத்தோடு ஆந்திர மாநிலம் ரெகாடா கிராமத்தைச் சேர்ந்த சாய் தேஜா என்ற ராணுவ வீரரும் ஹெலிகாப்டரில் பயணித்தார். அவரும் இந்த விபத்தின் மூலம் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த அவரது குடும்பத்தினரும் சொந்த கிராமத்தினரும் மிகுந்த துரத்தில் ஆழ்ந்துள்ளனர். சித்தூர் மாவட்டம் குரபாலகோட்டா ஈகுவா ரெகாடா கிராமத்தைச் சேர்ந்தவர் சாய் தேஜா, 2013-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். 27 வயதான சாய் தேஜாவுக்கு சர்மிளா என்ற மனைவியும் 4 வயதில் ஆண்குழந்தையும் 2 வயதில் பெண் குழந்தைகளும் உள்ளனர். 


சாய் தேஜா இறுதியாக அவரது மனைவியிடமும் அவரது குழந்தைகளிடமும் வீடியோ கால் மூலம் புதன்கிழமை காலை பேசியுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். சாய் தேஜா ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.  அவரது தந்தை மோகன் விவசாயி. தாய் புவனேஸ்வரி குடும்பத் தலைவியாக இருந்துள்ளார். அவரது சகோதரர் மகேஷும் ராணுவத்தில் ஜவானாக பணிபுரிந்து தற்போது சிக்கிமில் பணியாற்றி வருகிறார்.


சாய் தேஜா ஒரு வருடத்திற்கு முன்பு தனது குழந்தைகளின் கல்விக்காக தனது குடும்பத்தை மதனப்பள்ளி நகரில் உள்ள எஸ்பிஐ காலனிக்கு மாற்றினார். அவரது திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டதும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று இரவு குன்னூருக்கு கிளம்பினர். 


ஜெனரல் பிபின் ராவத்தின் அனைத்து சுற்றுப்பயணங்களிலும் சாய் தேஜா உடன் சென்றுள்ளார். ஏழு மாதங்களுக்கு முன்புதான் ஜெனரல் பிபின் ராவத்தின் எஸ்பிஓவாக சாய் தேஜா சேர்ந்தார். ஜெனரலுடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் சாய் தேஜா. 





மூன்று மாதங்களுக்கு முன்பு விநாயக சதுர்த்தி பண்டிகையின் போது சாய் தேஜா தனது வீட்டிற்கு கடைசியாக வருகை தந்தார் என்றும் ஒரு மாதம் தனது குடும்பத்துடன் இருந்தார் என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். விடுப்புக்கு விண்ணப்பித்துவிட்டு ஜனவரி மாதம் வீடு திரும்புவதாக உறுதியளித்த சாய் தேஜா கடைசி வரை வரவில்லை என கண்ணீர் கலங்க கூறுகின்றனர் குடும்பத்தினர். 


 






உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், ராணுவ வீரர் சாய் தேஜா உள்ளிட்ட 13 பேரின் உயிரிழப்புக்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மொகன் ரெட்டி இரக்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிசந்திரனும் 13 பேரின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தன் இரங்கலை பதிவு செய்துள்ளார்.