Crime: மத்திய பிரதேசத்தில் மருமகளே மாமியாரை 95 முறை கத்தியால் குத்திக் கொன்றது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


மாமியாரை கொன்ற மருமகளுக்கு மரண தண்டனை:


கடந்த 2022 ஆம் ஆண்டு தனது மாமியாரை 95 முறை கத்தியால் குத்தி கொலை செய்த 24 வயது பெண்ணுக்கு, மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.  ரேவா மாவட்டத்தின் நான்காவது கூடுதல் அமர்வு நீதிபதி பத்மா ஜாதவ், தனது 50 வயது மாமியார் சரோஜ் கோலைக் கொன்றதற்காக, காஞ்சன் கோல் என்ற குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் என்று கூடுதல் அரசு வழக்கறிஞர் விகாஸ் திவேதி தெரிவித்தார். மங்காவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்ரைலா கிராமத்தில் வசிக்கும் காஞ்சன், குடும்பக் கலவரத்தைத் தொடர்ந்து ஜூலை 12, 2022 அன்று தனது மாமியாரை அரிவாளால் 95 முறை குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.


நடந்தது என்ன?


மங்காவா காவல் நிலையத்திற்குட்பட்ட அட்ரைலா கிராமத்தில் தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. அதன்படி, சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டில் யாருமே இல்லாத நேரத்தில் மாமியர் மருமகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காஞ்சன் கோல், தனது மாமியார்  சரோஜ் கோலை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். அவரது மகன் வீட்டிற்கு வந்தபோது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  உடனடியாக சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவித்ததோடு, தனது தாயை மருத்துவமனைக்கும் கொண்டு சென்றார்.  அங்கு சரோஜ் கோலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.


இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட சரோஜ் கோலின் கணவர் வால்மிக் கோலும், குற்றத்திற்கு தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் இணை குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார், ஆனால் ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறினார்.