மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் கிணற்றில் விழுந்த சிறுவன் காப்பாற்றுவதை வேடிக்கை பார்த்த 11 பேர் கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து கிணற்றின் உள்ளே விழுந்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
“மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது விதிஷா மாவட்டத்தின் கன்ஞ் பசோடா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சந்தீப், கடந்த 15-ந் தேதி மாலை அவனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் நீர் இறைக்கச் சென்றுள்ளான்.
50 அடி வரை உயரம் கொண்ட அந்த கிணற்றில் 20 அடி வரை தண்ணீர் இருந்துள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் சந்தீப் கிணற்றின் உள்ளே தவறி விழுந்துவிட்டான். இதைப்பார்த்து பதறிப்போன அக்கம்பக்கத்தினர் சிலர் உடனடியாக கிணற்றின் உள்ளே குதித்தனர். மேலும், சிலர் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சிறுவன் கிணற்றின் உள்ளே விழுந்த தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் ஊர் மக்கள் பலரும் கிணற்றின் பக்கவாட்டு சுவரில் சுமார் 50 நபர்கள் வரை அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த கிணறு மிகவும் பழமையான கிணறு என்பதாலும், பக்கவாட்டு சுவர் பாழடைந்த நிலையில் இருந்ததாலும் அவர்களின் பாரம் தாங்காமல் சுவர் திடீரென இடிந்தும், மண் சரிந்தும் கிணற்றின் உள்ளே விழுந்தது.
இதனால், பக்கவாட்டுச் சுவற்றில் அமர்ந்திருந்த 29 பேர் கிணற்றின் உள்ளே நுழைந்தனர். இதையடுத்து, உடனடியாக மீண்டும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுவன் உள்பட 30 பேர் கிணற்றில் உள்ளே விழுந்து விட்டதாலும், கிணறு சரிந்து பலரும் உள்ளே சிக்கிக்கொண்டதாலும் தேசிய பேரிடர் மீட்பு படைக்கும், மாநில பேரிடர் மீட்பு படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் 15-ந் தேதி மாலை முதல் 16-ந் தேதி மாலை முதல் தொடர்ச்சியாக மீட்பு பணியில் ஈடுபட்டு 19 பேரை உயிருடன் மீட்டனர். கிணற்றில் விழுந்த 11 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய பிரதேச அரசு சார்பாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அந்த மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.