உச்சநீதிமன்றம் விரைவில் தனது வழக்கு விசாரணைகளை நேரலை செய்யும் என தலைமை நீதிபதி N.V.ரமணா குறிப்பிட்டுள்ளார். குறைந்தபட்சம் சில நீதிமன்ற அறைகளில் விசாரணைக்கு வரும் வழக்குகளாவது நேரலை செய்யப்படும் என்பது அவர் குறிப்பிட்டதிலிருந்து தெரியவந்துள்ளது. உச்சநீதிமன்ற நிர்வாக இது தொடர்பாக முழு நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
’சில நீதிமன்றங்களின் நீதிமன்ற நடவடிக்கைகளையேனும் நேரலை செய்வதற்கு நாங்கள் ஆர்வமாக உள்ளோம். அதற்கான ஆவண செய்து வருகிறோம். மற்றொருபக்கம் நீதிமன்றத்தில் இருப்பவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டு வருகிறது. இந்த நவீன டெக்னாலஜி உலகத்தில் இந்த முறையை மிகச்சிக்கனமான செலவில் செய்யமுடியும் என எனக்கு சொல்லியிருக்கிறார்கள்’ எனத் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் நேரலை நிகழ்வுகள் தொடக்கவிழாவில் அவர் இந்தத் தகவலைப் பகிர்ந்தார். அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19-இன் கீழ் நேரலை என்பது அவசியமானது. மேலும் ’பொதுமக்களின் நீதியின் மீதான நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்கு இது அத்தியாவசியமானது. நீதிமன்ற வழக்கு விசாரணைகளை கவனிக்க பொதுமக்கள், வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் என அனைவருக்குமே உரிமை இருந்தாலும் வறுமை, சமூக ஏற்றத்தாழ்வுகள், விழிப்புணர்வு இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் மக்களால் இதில் பங்கெடுக்க முடிவதில்லை. நீதிவழங்குவதில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லாததும் நீதியை எல்லோரும் அனுகமுடியாமல் செய்துவிடுகிறது அதற்கு இந்த நேரலை ஓளிபரப்பு சிறு தீர்வாக இருக்கும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக ,தேசத்துரோக வழக்குகள் இன்னமும் நாட்டுக்குத் தேவையா என அண்மையில் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியல் சாசன பிரிவு 124 ஏ-வை ரத்து செய்யக்கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் நடைபெற்றது. இரண்டு தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் தலைமை நீதிபதி கூறியதாவது, ’ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியர்களை அடக்க கொண்டுவரப்பட்ட தேசத்துரோக வழக்குகள் தேவையா? நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இந்த சட்டத்தை கடைபிடிப்பது ஏன்? தேசத்துராக வழக்கு என்பது ஒரு தச்சரிடம் ஒரு மரக்கட்டையை வெட்ட கொடுக்கப்பட்ட ரம்பம் போன்றது. அந்த ரம்பத்தை கொண்டு ஒட்டுமொத்த காட்டையும் தற்போது அழிப்பதாக தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியர்களை அடக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக வழக்குகள் இன்னும் தேவையா? தேசத்துரோக வழக்குகள் விசாரணை அமைப்புகளால் தவறாக பயன்படுத்தப்படுகிறது’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.