பல வித்யாசமான கிராமங்களை நாம் கண்டுள்ளோம், நாம் வாழும் இடங்களுக்கு அருகிலேயே வித்யாசமான நடைமுறை கொண்ட கிராமங்கள், வினோத பாரம்பரியங்கள் கொண்ட கிராமங்களை கண்டுள்ளோம். குரங்குகள் இறந்தால் மனிதர்களை போலவே இறுதி சடங்கு நடத்தும் கிராமம் ஒன்று இந்தியாவில் உள்ளது. கொரோனா பெருந்தோற்று காலகட்டத்தில் மனிதர்கள் இருந்தாலே ஓரிரு நாட்களுக்கு மேல் வருந்துவதற்கு நேரமின்றி வாழ்க்கை உருண்டுகொண்டிருக்க, இறந்துபோன குரங்கிற்கு இறுதி சடங்கு நடத்தி அதில் 1500 பேருக்கு உணவளித்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது மத்திய பிரதேசத்தில் ஒரு கிராமம்.


மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தலுபுரா கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த கிராமத்தில் டிசம்பர் 29 அன்று குளிரால் இறந்த லாங்கூர் வகை குரங்கின் இறுதிச் சடங்குகளின் ஒரு பகுதியாக சுமார் 1,500 பேருக்கு கிராம மக்கள் நேற்று விருந்து அளித்தனர். இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து, கிராம மக்கள் பணம் சேகரித்து, அறிவிப்பு அட்டைகள் அச்சிட்டு 1,500 க்கும் மேற்பட்டவர்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். ஒரு பெரிய பந்தலின் கீழ் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையாக அமர்ந்து உணவு உண்ணும் விருந்தின் வீடியோவும் வெளிவந்துள்ளது.



கடந்த டிசம்பர் 29 அன்று குரங்கு இறந்ததால் வேதனையடைந்த ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தலுபுரா கிராமத்தில் வசிப்பவர்கள் இறுதி சடங்குகளை ஏற்பாடு செய்தனர். மக்கள் குரங்கின் சடலத்தை தகனம் செய்யும் இடத்திற்கு எடுத்துச் செல்லும்போது, பாடல்கள் பாடிக்கொண்டே தூக்கிச்செல்லும் இறுதி ஊர்வல காட்சிகள் தற்போது வெளிவந்துள்ளன. ஹரி சிங் என்ற இளைஞர் இந்து முறைப்படி குரங்கிற்காக மொட்டை அடித்துக் கொண்டார். உயிரிழந்த இந்த குரங்கு செல்லபிராணியாக வளர்க்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு அடிக்கடி வந்து சென்றதால் மக்கள் இந்த காரியத்தை செய்துள்ளனர். அந்த உடல் தகன நிகழ்விலும், இறுதி ஊர்வலத்திலும் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்றனர். நேற்று சமூக ஊடகங்களில் இந்த வீடியோ வெளிவந்தது. குரங்கின் இறுதிச் சடங்கிற்காக சுமார் 1,500 பேர் கூடியிருந்ததை அடுத்து, கோவிட்-19 நெறிமுறைகளை மீறியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.






“எங்கள் கிராமத்தில் ஒரு குரங்கு இங்கே இறந்தால், மனிதர்களுக்கு செய்யப்படும் இறுதி சடங்குகளை கிராம மக்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பது வழக்கம். இந்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது, அதில் 1,500 பேர் கலந்து கொண்டனர்,” என்று தலுபுரா கிராமத்தின் முன்னாள் தலைவர் அர்ஜுன் சிங் சவுகான் திங்களன்று PTI இடம் கூறினார்.


குரங்குகளை அனுமனின் அவதாரம் என்று கிராம மக்கள் கருதுகிறார்கள், என்று லங்கூரின் இறுதி சடங்குகள் செய்யப்பட்ட பிறகு அவர் கூறியிருந்தார். லங்கூர் டிசம்பர் 29 அன்று கிராமத்திற்குள் வந்தபோது குளிரின் காரணமாக மிகவும் துன்பப்பட்டுள்ளது. பின்னர் நோய்வாய்ப்பட்ட குரங்கினை கிராம மக்கள் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். கால்நடை மருத்துவமனையில் சூடான ஆடைகளை வழங்கிய போதிலும் அதனால் குளிரை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதன்பிறகு சில மணிநேரங்களில் குரங்கு உயிர் பிரிந்தது. அதனால் கிராம மக்கள் இறுதி ஊர்வலம் நடத்தியுள்ளனர்.


வேகமாக பரவும் ஓமிக்ரான் வகை கொரோனா நெருக்கடி இருக்கும் சூழலில், பெரிய பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கோவிட் நெறிமுறைகளை மீறியதற்காக வழக்கு பதிவு செய்து இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது, மேலும் பலர் தலைமறைவாக உள்ளனர்.