நாட்டில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், பிலிப்கார்ட் போன்ற மின்னணு வணிகத் தளங்களில்  கொரோனா பரிசோதனை உபகரணங்கள்,பல்ஸ் ஆக்சி மீட்டர்கள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  


பிலிப்கார்ட் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், " கொரோனா இரண்டாவது அலையில், பல்ஸ் ஆக்சி மீட்டர்களின் தேவை முக்கிய பங்கு வகித்தது. தற்போது, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து பரவி வருகிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கும்போதே மருத்துவமனைக்குச் சென்று விட்டால் தீவிர நோய்  நிலைமை ஏற்படுவதைத்  தவிர்த்து விடலாம் என்று  மக்கள் கருதுகின்றனர். அதனால், அதன் தேவை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பெருநகரங்களில் பல்ஸ் ஆக்சி மீட்டர்களின் விற்பனை 4 மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. அதேபோன்று,  கொரோனா பரிசோதனை உபகரணங்களின் விற்பனை 12 மடங்கு அதிகரித்துள்ளது" என்று தெரிவித்தார்.     



 


Tata 1mg நிறுவனத்தின் விற்பனைப் பிரிவி அதிகாரி இதுகுறித்து கூறுகையில், " நோய் எதிர்ப்பு சக்தி முறைகளின் மூலம் தொற்று நோய்களை மக்கள் எதிர் கொண்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும்  வைட்டமின் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளின் விற்பனை 50% வரை அதிகரித்துள்ளது. எங்களின் ஒட்டு மொத்த கூடுதல் வளர்ச்சிக்கு இது வழிவகுத்துள்ளது" என்று தெரிவித்தார். 


உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுபடி, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94% அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு விரைவில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். 90 சதவீதத்திற்கும் கீழ் பிராணவாயுவின் அளவு குறைந்தால் மருத்துவ அவசர நிலையாக அது கருதப்படும்.


கொரோனா இரண்டாவது அலையின் போது, நோயாளிகளிடையே பிராணவாயுவின் தேவை வெகுவாக அதிகரித்து காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள்  ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை வாங்கத் தொடங்கினர். இதனையடுத்து, சந்தையில் மருத்துவ பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்தது   


விலை நிர்ணயம்: முன்னதாக, பல்ஸ் ஆக்ஸிமீட்டர், ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் இயந்திரம், நெபுலைசர்,  மின்னணு வெப்பமானி    க்ளூகோமீட்டர் உள்ளிட்ட 5 மருத்துவ உபகரணங்களின் வர்த்தக எல்லையை ( Trade Margins - விநியோகஸ்தர்களுக்கான விலையில் 70% வரை நிர்ணயம் செய்யப்பட்டது) தேசிய மருந்து விலை ஆணையகம் (என்பிபிஏ) நிர்ணயித்தது.   




மேலும், தமிழ்நாடு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ், கிருமிநாசினி,  முகக்கவசம், பிபிஇ கிட், ஆக்சிஜன் மாஸ்க் - சர்ஜிக்கல் மாஸ்க், பல்ஸ் ஆக்ஸிமீட்டர் உள்ளிட்ட 15 கொரோனா பாதுகாப்பு உபகரணங்களுக்கு விலை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்படத்தக்கது.