இலவசங்கள் நாட்டை கெடுக்கின்றன என்று சொல்லிவிட்டு இமாச்சல் தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள், ஸ்கூட்டி அறிவித்துள்ள பாஜகவை டி.ஆர்.பி.ராஜா சாடியுள்ளார்.


தி.மு.க. ஐ.டி. விங்கின் மாநிலச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவருமான டி.ஆர்.பி.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டு, பாஜகவுக்கு சொந்த புத்தியும் நல்லெண்ணமும் இல்லை எனக் கடுமையாக சாடியுள்ளார்.


 






இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதி அறிக்கையை பா.ஜ.க. இன்று வெளியிட்டுள்ளது.  இந்தத் தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா சிம்லாவில் முன்னதாக வெளியிட்டார். இந்தத் தேர்தல் அறிக்கையை உருவாக்குவதற்கு முன் பொதுமக்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற குழு ஒன்றை பாஜக அமைத்திருந்தது. 


இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் புதிய முயற்சியாக பெண்களுக்கென தனி தேர்தல் வாக்குறுதி அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது.


 






தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள்



  • பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில்  பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும்.

  • படிப்படியாக 8 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

  • மாநிலத்தில் புதிதாக 5 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.

  • இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள வக்ஃப் சொத்துக்களில் சட்ட விரோத செயல்களை தடுக்க பாஜக அரசு ஆய்வு நடத்தும்.

  • 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களும்,  உயர்கல்வி பயில்பவர்களுக்கு இலவச ஸ்கூட்டியும் வழங்கப்படும்.

  • அரசு வேலைகளில் பெண்களுக்கு முப்பத்து மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.