மத்தியப்பிரதேச மாநிலம் க்வாலியர் அருகே குழந்தை வேண்டும் என்பதற்காக பாலியல் தொழிலாளிகளை பலிகொடுத்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து இந்த இரட்டைக் கொலை தொடர்பாக மொத்தம் ஐந்து பேரை அந்த மாநில போலீஸ் கைது செய்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் க்வாலியரை சேர்ந்தவர் பண்ட்டூ, இவரது மனைவி மம்தா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 18 வருடங்களாகியும் அவர்களுக்குக் குழந்தை இல்லை.


பல சிகிச்சை செய்தும் பலனில்லை என்பதால் மம்தாவின் உறவினர் நீரஜை அணுகியுள்ளனர். நீரஜூம் யாதவ் என்கிற சாமியார் பெயரைச் சொல்லி அவரிடம் சென்றால் குழந்தை பிறக்கும் என தம்பதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.நீரஜ் சாமியாரிடம் தம்பதிகளை அழைத்துச் சென்றுள்ளார். 





போலி சாமியாரோ, பாலியல் தொழிலாளி ஒருவரை பலிகொடுத்தால் நிச்சயம் குழந்தை பிறக்கும் எனக்கூறியுள்ளார். அதன் பிறகு இதற்கான திட்டங்கள் அனைத்தையும் நீரஜ் தீட்டியுள்ளார். பாலியல் தொழிலாளிகளின் மேனேஜர் ஒருவரை அனுகி விவரத்தை சொல்லி பத்தாயிரம் பணம் கொடுத்துள்ளார் நீரஜ். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த மேனேஜர் ஒரு பாலியல் தொழிலாளியை அனுப்பியுள்ளார். அவரைக் கழுத்தை நெருக்கிக் கொலை செய்த நீரஜ். பலிபூஜை செய்வதற்காக வண்டியில் வைத்து அமர்த்தி சாமியாரிடம் எடுத்துச் சென்றுள்ளார். போகும் வழியில் உடல் கீழே விழுந்து சிதறியுள்ளது.அதனால் பயந்துபோன நீரஜ் பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பியுள்ளார். 


முதல்முறை சரியாகச் செய்யவில்லை என்பதால் இரண்டாவதாக இதே போல மீண்டும் ஒரு பாலியல் தொழிலாளியை அழைத்துச் சென்று கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார் நீரஜ். ஆனால் அந்தப் பாலியல் தொழிலாளி குடித்திருந்ததால் அவரை பலியிட முடியாது என மறுத்திருக்கிறார் இந்த போலி சாமியார். 


இரண்டு சம்பவங்களும் 18 மற்றும் 20 அக்டோபர் ஆகிய தேதிகளில் நடைபெற்றிருக்கிறது. முதல் கொலையில் சாலையில் பிணத்தைக் கண்ட போலீசார் மேலதிக விசாரனையில் நீரஜைப் பிடித்துள்ளனர். நீரஜிடம் போலீஸ் விசாரித்ததில் மேலும் ஒரு பாலியல் தொழிலாளியைக் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து நீரஜ் உட்பட வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரை மத்தியபிரதேசக் காவல்துறை கைது செய்துள்ளது. 


உடலுறவுக்குப் பின் கொலை செய்யப்பட்டனரா? 


பாலியல் தொழிலாளிகள் இருவருமே கொலை செய்யப்படுவதற்கு முன்பு நீரஜுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். பலி கொடுக்கப்படுவதற்கு முன்பு அவர்கள் உடலுறவில் ஈடுபடவேண்டும் என சாமியார் சொன்னதால் தான் இவ்வாறு செய்ததாக நீரஜ் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். பாலியல் தொழிலாளியின் உடலில் இருந்த தடயங்களைக் கொண்டுதான் அவர்கள் நீரஜை குற்றவாளி எனக் கண்டுபிடித்துள்ளனர். குழந்தை பேறுக்காக மாந்திரீகத்தை நம்பி பாலியல் தொழிலாளர்கள் பலிகொடுக்கப்பட்டிருப்பது மத்தியபிரதேசத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.