தெலங்கானாவில் கடந்த 9 ஆண்டுகளாக பாரத் ராஷ்டிர சமிதியின் (பி.ஆர்.எஸ்) ஆட்சி நடந்து வருகிறது. நடைபெற்ற இரண்டு சட்டப்பேரவை தேர்தல்களிலும் கே. சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சி மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பெரும் தோல்வியை சந்தித்தது.
இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் பாஜக போராட்டங்களை நடத்தி வருகிறது.
மற்ற மாநிலங்களை போலவே, இங்கும் வரலாற்று தலங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்து வருகிறது. மற்றொரு, தேர்தலை முன்னிட்டு தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவரும் மல்காஜகிரி எம்பியுமான ரேவந்த் ரெட்டி தலைமையில் நடைபயணம் நடத்தப்பட்டு வருகிறது.
முட்டை, தக்காளி வீச்சு:
பூபாலப்பள்ளியில் நடைபயணம் நுழைந்த போது ரேவந்த் ரெட்டி மீது முட்டை, தக்காளி ஆகியவை வீசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் மீது கல் வீசியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ரேவந்த் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், "பூபாலப்பள்ளியில் உள்ள எங்கள் தெரு முனை கூட்டத்தில் எங்கள் மீது பாரத் ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த குண்டர்கள் கற்களை வீசி இடையூறு செய்ய முயன்றி செய்தனர். ஆனால், நாங்கள் காங்கிரஸ் வீரர்கள், யாருக்கும் பயப்படமாட்டோம். யாத்திரை தொடங்கப்பட்டு 16 நாட்களே ஆகியுள்ளன. பி.ஆர்.எஸ் கட்சியில் பயத்தைப் பார்க்க முடிகிறது" என பதிவிட்டுள்ளார்.
தெருமுனை கூட்டத்தில் அடிதடி:
தெருமுனை கூட்டத்தில் ரேவந்த் பேசும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் ஒரு வாகனத்தின் மேல் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, பி.ஆர்.எஸ் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரு குழுவினர், வாகனத்தின் மீது கற்களை வீசத் தொடங்கினர் என செய்தி வெளியாகி இருந்தது.
பதில் தாக்குதலாக காங்கிரஸ் தொண்டர்கள், பி.ஆர்.எஸ் கட்சியினர் மீது கற்களை வீசினர். இதன் காரணமாக, போலீஸ்காரர் ஒருவருக்கும் மூன்று முதல் நான்கு கேசிஆர் கட்சி தொண்டர்களுக்கும் சிறு காயங்களுக்கு ஆளாகினர்.
கோபத்தில் இருந்த பி.ஆர்.எஸ் கட்சி தொண்டர்கள், “ரேவந்த் ரெட்டி திரும்பிப் போ” என்று முழக்கங்களை எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதனால் மோதல் வெடித்தது. போலீசார் லேசான தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
குடிகாரர்களை வைத்து தாக்குவது சரி அல்ல:
இதுகுறித்து ரேவந்த் ரெட்டி பேசுகையில், "உங்களுக்கு தைரியம் இருந்தால் வந்து என்னை எதிர்கொள்ளுங்கள். போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான குடிகாரர்களை வைத்து என்னை தாக்குவது சரியல்ல" என சாடியுள்ளார்.
ரேவந்த் ரெட்டி தனது பாத யாத்திரையை தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் இருந்து பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானில் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர் அதிகார போட்டி நிலவி வருகிறது. தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் போன்றே அங்கு ஆளுநர் தமிழிசைக்கும் கேசிஆருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மாற்று கருத்து நிலவி வருகிறது.