அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், தன்னுடைய கூட்டணியை பலப்படுத்தும் வேலையில் பாஜக இறங்கியுள்ளது.


குறிப்பாக, தென்னிந்தியாவை குறிவைத்து பாஜக வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடனான கூட்டணி உறுதியாகியுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக திட்டமிட்டு வருகிறது.


அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு:


கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், அதன் பிறகு, அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து கூட்டணியில் சலசலப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.


சமீபத்தில் கூட, முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர் ராஜூ வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தனர்.


வார்த்தை போரின் உச்சக்கட்டமாக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஜெயக்குமார் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். 


தமிழ்நாடு பாஜக தலைமை மாறுகிறதா?


பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் சமூ வலைதளங்களிலோ, பொதுவெளியிலோ அதிமுக குறித்தோ கூட்டணி குறித்தோ விமர்சிக்க வேண்டாம் என பாஜகவினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல, பாஜகவை விமர்சிக்க கூடாது என அதிமுகவினருக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. 


இந்த நிலையில், அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட ஐந்து முன்னாள் அமைச்சர்கள் டெல்லுக்கு சென்றுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


அதிமுக போட்ட ஸ்கெட்ச்:


ஆனால், அவர்களுக்கு அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, பாஜக மூத்த தலைவரும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான பியூஷ் கோயலை சந்தித்து பேசியுள்ளதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. 


இந்த சந்திப்பின்போது, பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என அதிமுக தலைவர்கள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு பாஜக தரப்பில் இருந்து எந்த மாதிரியான பதில் கிடைத்துள்ளது என்பது குறித்து தெரியவில்லை.