கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பூசி தான் ஸ்புட்னிக் வி. ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம் இந்தியாவில் தங்கள் பங்குதாரர்களான டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்தின் மூலம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று ஐதராபாத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
மே 1ஆம் தேதி ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியா வந்திறங்கியது, இந்நிலையில் நேற்றைய தினம் (மே 13ஆம் தேதி) மத்திய மருந்து ஆய்வகம் இந்தியாவில் இதனை பயன்படுத்துவதற்கான ஒப்புதலை அளித்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் இருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும் நிலையில், இதன் விலை 948 ரூபாய் - அத்துடன் 5 சதவீத ஜிஎஸ்டி வரியும் சேர்க்கப்பட்டு ஒரு டோஸ் ஸ்புட்னிக் 995 ரூபாய் 40 பைசா என இந்திய சந்தைக்கு வரவுள்ளது.
ஸ்புட்னிக் வி 91.6% செயல்திறன் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோன எதிராக பயன்பாட்டிற்கு வரும் மூன்றாவது தடுப்பூசி இதுவாகும், ஏற்கனவே கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
அடுத்த வாரத்தில் இருந்து ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியா சந்தைகளில் கிடைக்க தொடங்கும் என்று டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் தெரிவித்துள்ளது. வரப்போகும் மாதங்களில் மேற்கொண்டு ஸ்புட்னிக் இறக்குமதி செய்யப்படும், அதே நேரம் இந்தியாவில் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதன் உற்பத்தி தொடங்கியவுடன் இதன் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை உலகம் முழுவதும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்..