நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், அதுதொடர்பாக செல்போனில் வரும் காலர் டியூன்களை மாற்றுங்கள் என டெல்லி உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தனர்


அப்போது அவர்கள் கூறுகையில்,  “செல்போனில் ஒருவர் அழைக்கும் போதெல்லாம் எரிச்சலூட்டும் வகையில் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்ற காலர் டியூன் வருகிறது. நாட்டில் போதுமான தடுப்பூசிகள் இல்லை. ஆனால், தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளுங்கள் காலர் டியூன் மூலம் வலியுறுத்திகிறீர்கள். இதனால், யார் தடுப்பூசி பெறுவார்கள்? இந்த செய்தியின் பயன் என்ன?” என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது.




மேலும், “ஒரு நபர் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான ஒன்றைக் கேட்கும்போது, ​​அது  அவர்களுக்கு உதவக்கூடும். எனவே, தயவு செய்து காலர் டியூன்கள் அதிகமானவற்றை சேருங்கள்” என்றது.


மேலும், டிவி ஆங்கர்கள் மற்றும் தயாரிப்பாளகளை கொண்டு  ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், தடுப்பூசி போன்றவற்றில் விழிப்புணர்வை பரப்புவதற்கான திட்டங்களை உருவாக்குங்கள் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது. 


இதனால், சிறு வீடியோக்களை  அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்ப முடியும். அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்களை விழிப்புணர்வை செய்ய கேட்கலாம். இவை அனைத்தும் விரைவில் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.







தவறாமல் கைகளை கழுவ வேண்டும் மற்றும் முக கவசம்  அணிவதன் முக்கியத்துவம் குறித்து கடந்த ஆண்டு நிறைய விளம்பரங்கள் இருந்ததாக மத்திய அரசுக்கு நினைவூட்டிய நீதிமன்றம், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது போல சிறிய ஆடியோ மற்றும் வீடியோவை இப்போது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தது.


“நாம்  நேரத்தை இழக்கிறோம். அவசர உணர்வு இருக்க வேண்டும்” எனக் கூறிய நீதிபதிகள், கொரோனா மேலாண்மை குறித்த தகவல்களை அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் வழியாக பரப்புவதற்கு  என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது குறித்தும, காலர் டியூன்கள் குறித்தும் வரும் 18 ஆம் தேதிக்குள் அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு மத்திய மற்றும் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டனர்.