Crimes Against Women: இந்தியாவில் கடந்த ஆண்டு பெண்களுக்கு மீதான வன்கொடுமைகள் அதிக அளவில் நடந்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 31,000 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தால் (NCW) பெறப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இது 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டில், தேசிய மகளிர் ஆணையத்தில் 30,864 புகார்கள் பதிவானது, 2022 இல், புகார்களின் எண்ணிக்கை 30,957 ஆக அதிகரித்துள்ளது.
30,957 புகார்களில், அதிகபட்சமாக 9,710 பெண்களின் கண்ணியம் குறைவாக நடத்து மற்றும் மனதளவில் துன்புறுத்துதல் சார்ந்த புகார்களாக பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து 6,970 குடும்ப வன்முறை மற்றும் 4,600 வரதட்சணை துன்புறுத்தல் தொடர்பானவை என PTI மூலம் பெறப்பட்ட தகவல்களில் தேசிய மகளிர் ஆணையம் தரவு தெரிவித்துள்ளது.
இந்த புகார்களில், 54.5 சதவீதம் (16,872) புகார்கள் அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து பதிவாகியுள்ளன. டெல்லியில் 3,004 புகார்கள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,381 புகார்களும், பீகார் மாநிலத்தில் 1,368 புகார்களும் மற்றும் ஹரியானா மாநிலத்தில் 1,362 புகார்களும் பதிவாகியுள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 668 புகார்கள் பதிவாகியுள்ளன.
தரவுகளின்படி, கண்ணியத்துடன் வாழும் உரிமை மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான அதிக புகார்கள் உத்தரபிரதேசத்தில் இருந்து பெறப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் குழு 33,906 புகார்கள் 2014ல் பதிவாகியிருந்தது. அதன் பின்னர், 2022 தான் அதிக புகார்கள் பதிவாகியுள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்தில் தரவுகள் தெரிவிக்கின்றன.
2,523 புகார்கள் பெண்களை சுதந்திரமாக இருக்க விடுவதை தடுத்து ஒடுக்குவது சம்பந்தமாக பதிவாகியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்தல் உள்ளிட்ட புகார்களின் எண்ணிக்கை மட்டும், 1,701 ஆகும். மேலும், 1,623 புகார்கள் பெண்களுக்கு எதிரான காவல்துறையின் அக்கறையின்மையால் நடந்தவை மற்றும் 924 புகார்கள் இணைய வழியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் தொடர்பானவை ஆகும்.
ஆனால் இவையாவும் பதிவான குற்றங்கள் குறித்த தரவுகள் தான், பதியப்படாதா குற்றங்கள் இன்னும் ஏராளமாக இருக்கும் என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும்.