தமிழ்நாடு:
- வருகின்ற ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்துகிறது. வெளிநாட்டில் இருக்கும் முதலீட்டாளர்களை பங்கேற்குமாறும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23ஆம் தேதி சென்ற நிலையில், நேற்று தாயகம் திரும்பினார்.
- ஜப்பான் தலைநகர் டோக்கியோ - சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தவும், சிங்கப்பூர்- மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
- குழந்தை திருமண விவகாரம் தொடர்பாக மருத்துவர்களிடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அலுவலர் பேசிய ஆடியோ தங்களிடம் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- அரசைக் கலந்தாலோசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னிச்சையாக செயல்படுகிறார் என அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
- அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஜூன் 9இல் நடைபெறும் என சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தற்காலிகமாக பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
- சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மெட்ரோ குடிநீர் லாரி உரிமையாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளதால், குடிநீர் விநியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா:
- கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.1 சதவீதம் அதிகரித்து இந்தியப் பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- உலகளாவிய மற்றும் ஆசிய வளர்ச்சியின் உந்து சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கூட்டுறவு துறையில் பயிர் சேதங்களைக் குறைத்து, விவசாயிகள் குறைந்த விலையில் விற்பனையை செய்வதை தடுக்கும் வகையிலும் நாட்டின் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திறனை உருவாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அமைச்சரவை 1 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
- புகைப்பிடித்தலுக்கு எதிரான எச்சரிக்கை வாசகத்தை ஓடிடி தளத்திலும் வெளியிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. புகை பிடித்தலுக்கு எதிரான வாசகத்தை வெளியிடாத ஓடிடி தளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
- அமெரிக்காவுக்கு ஆறு நாள் பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நேற்று அமேரிக்க வாழ் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கடவுளை விட தங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைக்கும் மக்கள் இந்தியாவில் உள்ளனர். பிரதமர் மோடி அப்படிப்பட்டவர்தான். சிலர் தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைத்து, வரலாற்றை வரலாற்றாசிரியர்களுக்கும், அறிவியலை விஞ்ஞானிகளுக்கும், ராணுவத்திற்குப் போரையும் விளக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்" என்றார்.
உலகம்:
நியூசிலாந்தின் தெற்கு கடற்கரையில் உள்ள ஆக்லாந்து தீவுகளில் புதன்கிழமை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) சுட்டிக்காட்டியுள்ளது.
- பூமியில் 10 ஆயிரம் மீட்டர் (32,808 அடி) ஆழத்திற்கு சீன விஞ்ஞானிகள் துளையிட தொடங்கியுள்ளனர். பூமியின் மேற்பரப்பிற்கு மேலேயும் கீழேயும் புதிய எல்லைகளை ஆராயும் வகையில் ஆய்வு செய்து வருகின்றனர் விஞ்ஞானிகள். எண்ணெய் வளம் மிக்க ஜின்ஜியாங் பகுதியில் சீன வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நீண்ட ஆழத்திற்கு துளையிடும் பணி நேற்று தொடங்கியது.
உலகின் மிகவும் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. இதை காற்றின் தரத்தை வைத்து நிர்ணயித்து வெளியிட்டிருக்கின்றது ஸ்விஸ் கம்பெனியான ஐ கியூ ஏர் என்ற காற்றின் தரத்தை நிர்ணயிக்கும் தனியார் நிறுவனம்.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரின்போது ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக சென்னை அணி கேப்டன் தோனி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தோனியின் இடத்தை அடுத்து நிரப்பப்போவது யார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன், அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும், உங்களுக்கு எவ்வாறு கோப்பையை வென்றப்போது மகிழ்ச்சி இருந்ததோ, அதேபோல் தான் தனக்கும் இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.