கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.1 சதவீதம் அதிகரித்து இந்தியப் பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு காலாண்டுகளில் ஜிடிபி வளர்ச்சி குறைந்த நிலையில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.


7.2 சதவீத ஜிடிபி வளர்ச்சி:


மூன்றாவது (அக்டோபர்-டிசம்பர்) காலாண்டில் 4.5% வளர்ச்சி கண்டுள்ளது. நான்காவது காலாண்டு மதிப்பீடு, முந்தைய ஆண்டின் 4% வளர்ச்சியை விட அதிகமாக உள்ளது. 2022-23 நிதியாண்டுக்கான ஒட்டுமொத்த மதிப்பீடு முந்தைய ஆண்டின் 9.1 சதவீத வளர்ச்சியைக் காட்டிலும் குறைவாக உள்ளது. ஆனால், இது, ரிசர்வ் வங்கி மதிப்பீட்டை விட சற்று குறைவு.


2022-23 நிதியாண்டில், ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. "உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மதிப்பீட்டை மீறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை" என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியிருந்தார்.
வர்த்தகம், ஹோட்டல்கள் மற்றும் போக்குவரத்துத் துறைகள் 14 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.


"இந்தியப் பொருளாதாரம் மீண்டெழுந்து இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது"


இந்தியாவின் 7.2 சதவிகித வளர்ச்சி குறித்து பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "2022-23 GDP வளர்ச்சி புள்ளிவிவரங்கள் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரம் மீண்டெழுந்து இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த வலுவான செயல்திறன், ஒட்டுமொத்த நம்பிக்கை மற்றும் கட்டாய மேக்ரோ-பொருளாதார குறிகாட்டிகளுடன், நமது பொருளாதாரத்தின் நம்பிக்கைக்குரிய பாதையையும் நமது மக்களின் உறுதியையும் எடுத்துக்காட்டுகிறது" என்றார்.


சமீபத்திய ஆய்வு அறிக்கையில், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளரும் G20 பொருளாதாரமாக இருக்கும் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட மதிப்பீடு நிறுவனமான மூடிஸ் தெரிவித்திருந்தது.


ஆய்வறிக்கைகள்:


நகரமயமாக்கல் வீட்டுவசதி மற்றும் புதிய கார்களுக்கான தேவையை அதிகரிக்கும் அதே வேளையில், அரசாங்க உள்கட்டமைப்பு செலவுகள் எஃகு மற்றும் சிமெண்டிற்கான தேவையை தூண்டும். பசுமை இல்ல வாயு வெளியேற்றம் பூஜ்யமாக குறைக்கப்படும் என்ற மத்திய அரசின் உறுதி,  புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முதலீட்டைக் கொண்டுவரும் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


உலகளாவிய மற்றும் ஆசிய வளர்ச்சியின் உந்து சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதன் மூலம் உலகளாவிய வளர்ச்சியின்  உந்துசக்தியாக இந்தியா மாறுவதற்கான வாய்ப்பு உருவாகியிருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கடந்த 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில்  இந்தியா ஒட்டுமொத்தமான மாற்றங்களை எதிர்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.