மத்தியப்பிரதேசத்தில் தனியார் பள்ளி ஒன்று மாணவர்களை ஹிஜாப் அணிய வற்புறுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 


சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்:


இந்தியா பல மதங்கள், இனங்கள், கலாச்சாரங்கள், உணவுகள், பழக்க வழக்கங்கள் கொண்ட மதச்சார்பற்ற நாடாக திகழ்ந்து வரும் நிலையில், அவ்வப்போது எழும் விரும்பத்தகாத பிரச்சினைகள் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக உணவு, உடைகள் விஷயத்தில் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது. 


அம்மாநிலத்தின் தாமோ மாவட்டத்தில் கங்கா ஜம்னா என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பயின்ற மாணவர்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அதில் இடம் பெற்ற பெண்கள் அனைவரும் இஸ்லாமியர்களின் உடையாக கருதப்படும் ஹிஜாப் அணிந்திருந்தனர். இந்த ஹிஜாப் அணிந்த பெண்களில் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவிகளும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 


தீவிர விசாரணை:


இஸ்லாமிய அமைப்பால் நடத்தப்படும் இந்த பள்ளியில் இந்து மாணவிகளுக்கு கட்டாயப்படுத்தி ஹிஜாப் அணிவிக்கப்பட்டுள்ளதாக மாநிலத்தில் உள்ள இந்து அமைப்பினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி மனு அளித்தனர். இதனையடுத்து  மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா அறிவுறுத்தலின் படி இந்த விவகாரத்தில் மாவட்ட கல்வி அதிகாரி, காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு விசாரணை நடத்தினர். 


அப்போது பள்ளியின் சீருடை விதிகளில் மாணவிகள் ஹிஜாப் அணியலாம் என சொல்லப்பட்டுள்ளதாகவும்,  ஆனால் ஹிஜாப் அணிய சொல்லி யாருக்கும் தாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் பள்ளி உரிமையாளர் முஸ்டாக் கான் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுவரை பாதிக்கப்பட்டதாக எந்தவொரு மாணவியிடமும், அவர்கள் குடும்பத்தினரிடம் இருந்தும் புகார் வரவில்லை. இருந்தாலும் பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


பேனர்:


தேவையான நடவடிக்கை எடுக்க தாமோ கலெக்டர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூனாகோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சர்ச்சை எழுந்ததால் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து அந்த பேனர் அகற்றப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.