தமிழ்நாடு: 



  • தமிழகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் நியோ டைடல் பார்க்குகள் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளியிட்டார்.

  • சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான திட்டமிடல், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது பற்றியும் ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.   

  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது: மதுரையிலிருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசு காரில் பயணித்தவர்கள் வழி கிடைக்காத காரணத்தால் அரசுப்பேருந்து ஓட்டுநரின் கையை வெட்டியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளர் ரவுடிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து,மீள்வதற்குள் அரசு ஊழியர் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டப்பட்டிருப்பது  வேதனையளிக்கிறது, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ,இச்சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டிருப்பதை காட்டுகிறது.இதற்கு காவல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் முதல்வரின் பதில் என்ன? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வினவியுள்ளார். 

  • மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் அரசின் முடிவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது 

  • சேலத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் 4 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 10 வயது சிறுமி உள்பட 12 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  • சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாயும், விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50,000 ரூபாயும்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று  முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

  • தக்காளி விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் பண்ணை பசுமைக் காய்கறி கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

  • தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் இரண்டாவது நாளாக நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

  • தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் வீசக்கூடும், தமிழ்நாடு-தெற்கு ஆந்திரா கடற்கரை, மன்னார் வளைகுடா மற்றும் குமரி பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.


இந்தியா: 



  • பாதுகாப்புத் துறையில் தீரச்செயல் புரிந்தோருக்கான விருதுகள் மற்றும் சிறப்பாகப் பணியாற்றியோருக்கான சேவை பதக்கங்கள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.  mதமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் கூடுகல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கே பழனிக்கு மறைவுக்குப் பின் வீர்சக்ரா விருது வழங்கப்பட்டது

  • அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடைவிதிக்கவும், ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் பிட்காயின்களை வெளியிடுவதற்குமான சட்டவரைவை வரும் குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது.


உலகம்: 



  • அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகளில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.    


விளையாட்டு:   



  • விஜய் ஹசாரா கோப்பையில் பங்கேற்க இருக்கும் தமிழ்நாடு அணியின் விவரம் நேற்று வெளியாகியது. தமிழ்நாடு அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக், காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்தாக் அலி கோப்பையில் இருந்து விலகினார். அதனால், விஜய் சங்கர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இப்போது விஜய் ஹசாரா கோப்பைக்கும் விஜய் சங்கரே கேப்டனாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  எனினும், மீண்டும் அணியில் இடம் பிடித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.