மத்திய அரசு அமைப்பான நிதி ஆயோக் வெளியிட்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகளின் இந்திய நகரங்களின் குறியீட்டுப் பட்டியலில் ஷிம்லா, கோவை, சண்டிகர் ஆகிய மூன்று நகரங்கள் முதன்மை இடத்தைப் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் மோசமாக செயல்பட்ட நகரங்களாக தன்பாத், மீரட், இடாநகர் முதலானவைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 


நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் `நிலையான வளர்ச்சி இலக்குகளின் இந்திய நகரங்களின் குறியீட்டுப் பட்டியல்’ வெளியிடப்பட்டுள்ளது. இது இந்தியா - ஜெர்மனி வளர்ச்சி நிறுவனத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. 


இந்தப் பட்டியலை வெளியிட்டுப் பேசிய நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார், `நகரங்கள் வளர்ச்சியின் என்ஜின்களாக வளர்ந்து வருகின்றன. நிலையான வளர்ச்சி இலக்குகளின் இந்திய நகரங்களின் குறியீட்டுப் பட்டியல், டேஷ்போர்ட் ஆகியவை நிதி ஆயோக், ஜெர்மானிய வளர்ச்சி நிறுவனமான `கிஸ்’ அமைப்புடன் இணைந்து  வெளியிட்டுள்ளன. இது நிலையான வளர்ச்சி இலக்குகளை இந்திய நகரங்களில் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டு தொலைநோக்குத் திட்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார். 



மேலும், இந்தப் பட்டியலில் நகரங்களுக்கு இடையிலான பலம், பலவீனம் முதலானவை தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 


இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள டாப் 10 நகரங்கள்: ஷிம்லா, கோவை, சண்டிகர், திருவனந்தபுரம், கொச்சி, பனாஜி, பூனே, திருச்சி, அகமதாபாத், நாக்பூர். 


இதே பட்டியலில் மோசமான செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நகரங்கள்: தன்பாத், மீரட், இடாநகர், கவுஹாதி, பாட்னா, ஜோத்பூர், கோஹிமா, ஆக்ரா, கொல்கத்தா, பரிதாபாத். 


இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 56 நகரங்களுள் 44 நகரங்களில் சுமார் 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இவற்றுள் 12 நகரங்கள் மாநிலத் தலைநகரங்களாகவும் உள்ளன. 



ஷிம்லா


 


இந்தக் குறியீட்டுப் பட்டியலுக்காக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு, தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகம் முதலான மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் கீழ் உள்ள தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு நகரத்திற்கும் 0 முதல் 100 வரை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. 


100 மதிப்பெண்கள் பெற்ற நகரங்கள் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் முன்வைக்கப்பட்டிருக்கும் குறிக்கோள்களை நிறைவேற்றும் எனவும், 0 மதிப்பெண்கள் பெற்ற நகரங்கள் குறிக்கோள்களில் இருந்து மிகவும் பின்தங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 


0 முதல் 49 மதிப்பெண்கள் வரை பெற்ற நகரங்கள் `ஆர்வலர்கள்’ எனவும், 50 முதல் 64 மதிப்பெண்கள் வரை பெற்ற நகரங்கள் `செயல்படுபவர்கள்’ எனவும், 65 முதல் 99 மதிப்பெண்கள் பெற்ற நகரங்கள் `முன்னணியில் இருப்பவை’ எனவும், 100 மதிப்பெண்கள் பெறும் நகரங்கள் `சாதனையாளர்கள்’ எனவும் அழைக்கப்படும். எனினும், எந்த நகரமும் இதுவரை 100 மதிப்பெண்களையும் பெறவில்லை. 


இந்தப் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய தமிழக நகரங்கள் இடம்பெற்றுள்ளன.