உலகளாவிய மற்றும் ஆசிய வளர்ச்சியின் உந்து சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதன் மூலம் உலகளாவிய வளர்ச்சியின்  உந்துசக்தியாக இந்தியா மாறுவதற்கான வாய்ப்பு உருவாகியிருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


உலக வளர்ச்சியின் உந்து சக்தியாக உருவெடுக்கும் இந்தியா:


கடந்த 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில்  இந்தியா ஒட்டுமொத்தமான மாற்றங்களை எதிர்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பத்தாண்டு காலங்களில் உலகளவில்  சந்தை மற்றும் குறு நிறுவனங்களின் தலைசிறந்தப் பங்களிப்பின் மூலம் இந்தியா முன்னணி நாடாக  முன்னேறியிருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.


அடுத்த 25 ஆண்டுகளில், இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருமாறும் என்றும், பங்குச்சந்தைகளில் சிறந்த பங்களிப்பை கொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள  மாற்றங்கள் சர்வதேச அளவிலான முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


செலவீன மூலதனத்தில் புதிய உச்சம்:


பத்து மிகப்பெரிய மாற்றங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், விநியோகத்திற்கு உகந்த கொள்கை  சீர்திருத்தங்கள், பொருளாதார மேம்பாடு, நேரடி வங்கி பணப் பரிவர்த்தனை, அந்நிய நேரடி முதலீடு, பணவீக்க இலக்கு உள்ளிட்டவை அவற்றில் அடங்கும் எனவும் தெரிவிக்கிறது. இந்த ஆய்வறிக்கை. மத்திய அரசின் சிறப்பான கொள்கைகளை தேர்வு செய்யும் அணுகுமுறையே இத்தகைய மாற்றங்களுக்கு வித்திட்டு பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுத்திருக்கிறது.


சரக்கு மற்றும் சேவை பொருட்கள் ஏற்றுமதி இரண்டு மடங்கு உயரும்:


இதன் பலனாக உற்பத்தியிலும், செலவீன மூலதனத்திலும்  புதிய உச்சம் உருவாக்கப்பட்டிருப்பதுடன், இதன் மூலம் உள்நாட்டு ஒட்டு மொத்த உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் ஏற்றுமதி சந்தைப் பங்குகள், 2031 ஆம் ஆண்டில் 4.5% அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டுன் ஒப்பிடும் போது சரக்கு மற்றும் சேவை பொருட்கள் ஏற்றுமதி இரண்டு மடங்கு உயரும்.


இந்தியாவின் தனிநபர் வருமானம் தற்போது 2,200 டாலராக இருப்பதாகவும், இது வரும் 2032 ஆம் நிதியாண்டில் 5,200 டாலராக அதிகரிக்கும் எனவும் அந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.


எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான எதிர்பார்ப்புகள், உலகளாவிய  நிதி நெருக்கடி ஆகிவற்றுடன் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின்  விலையேற்றம்  மற்றும் திறமைமிக்க தொழிலாளர்கள் தட்டுப்பாடு உள்ளிட்டவை இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் எனவும் மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.