கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை சர்ச்சை கேரளாவில் சற்றே ஒய்ந்துள்ள நிலையில் அங்கே வேறொரு பிரச்னை உருவெடுத்துள்ளது. கேரள கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னாள் உறுப்பினராக இருந்த ஒரு பெண் அனுபமா என்பவரின் குழந்தை காணாமல் போன விவகாரம் தான் அது.


காணாமல் போன குழந்தையைத் தேடும் இந்த விவகாரத்தில் கேரள கம்யூனிஸ்ட் கட்சி அனுபமாவுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொன்னாலும் கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள் அனுபமாவுக்கு எதிராகக் கருத்து கூறிவருவது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் கேரள மந்திரி சஜி செரியன் அனுபமாவைத் தரக்குறைவாகப் பேசியதாக அவர்மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கார்யவூட்டம் பகுதியில் நடந்த அரசு விழா ஒன்றில் சஜி செரியன் அனுபமாவையும் அவரது இணையர் அஜீத்தையும் தரக்குறைவாகப் பேசியதாகப் புகார் தொடுக்கப்பட்டுள்ளது.




என்ன நடந்தது: 


கேரள எஸ்.எஃப்.ஐ.-ல் பேரூர்கூடா பகுதியின் முன்னாள் உறுப்பினராக இருந்தவர் அனுபமா. இவரது தந்தை ஜெயச்சந்திரன் அதே பேரூர்கூடாவில் சிபிஐஎம் முழுநேர ஊழியர். அனுபமாவுக்கும் அதே பேரூர்கூடாவில் டி.ஒய்.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்த அஜீத் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் அஜீத்துக்கும் அவரது மனைவிக்குமான விவாகரத்து வழக்கு கோர்ட்டில் அப்போது இருந்து வந்தது.அதனால் இருவரும் சேர்ந்து வாழ முடியவில்லை மற்றொரு பக்கம் இதனைக் காரணம் காட்டி ஜெயச்சந்திரனும் இவர்களது உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதற்கிடையே கடந்த அக்டோபர் 2019ல் அனுபமாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த மூன்றே நாட்களில் அனுபமாவின் சகோதரி திருமணத்தைக் காரணம் காட்டி குழந்தையை மூன்று நாட்கள் மட்டும் வெளியே ஒருவர் வீட்டில் வைத்திருப்பதாகவும் திருமணம் முடிந்ததும் எடுத்து வந்து தந்துவிடுவதாகவும் சொல்லியுள்ளனர்.


ஆனால் ஜெயச்சந்திரன் குழந்தையை எடுத்து வந்து தரவில்லை. குழந்தைகள் நலவாழ்வு மையத்தில் குழந்தையை விட்டுவிட்டு வந்ததாகச் சொல்லியுள்ளார். இதற்கிடையே அனுபமாவிடம் வலுக்கட்டாயமாக வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கிய ஜெயச்சந்திரன் குழந்தையை தத்துக்கொடுக்க அனுபமாவுக்கு சம்மதம் என அந்த லெட்டரில் எழுதியுள்ளார். திருவனந்தபுரம் குழந்தைகள் நலவாழ்வு மையத்தில் பெண் குழந்தை எனப் பதிவு செய்யப்பட்டு அந்தக் குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே அஜீத்துடன் சேர்ந்து தனது குழந்தையை தேடும் பணியில் தற்போது முச்சட்டையாக இறங்கியுள்ளார் அனுபமா. அதன் முதற்கட்டமாக ஜெயச்சந்திரன் மற்றும் அவரது மனைவி மீது திருவனந்தபுரம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 


விவாகரத்து பெற்ற அஜீத் முதல் திருமணம் காதல் திருமணம்தான் செய்தவர் என்றும் அவருக்கு முதல் மனைவியுடன் ஒரு குழந்தை இருக்கிறது என்றும் கேரள சிபிஎம் வட்டாரத்தில் சிலர் இதனைக் காரணம் காட்டி கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவாகரத்து அளித்த முதல் மனைவியும் அனுபமாவுடனான உறவுதான் தான் விவாகரத்து அளிக்கக் காரணம எனக் கூறியுள்ளார். 


ஜெயச்சந்திரன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் கேரளாவில் தத்துக்கொடுக்கப்படும் ஆண்குழந்தைகள் சில டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.