மக்களை பற்றி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கவலையில்லை. அவருக்கு நாற்காலி ஒன்றே குறிக்கோள் என்று நாராயணசாமி குற்றஞ்சாட்டியுனார். புதுச்சேரி இந்திராநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்  தர்மாபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் சிறப்பு அழைப்பாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த போது ஏழை எளிய மக்கள், மீனவர்கள், விவசாயிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிட மக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினோம். ஆனால் மத்தியில் உள்ள பிரதமர் மோடி அரசு காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்று புதுச்சேரி கவர்னராக கிரண்பேடியை நியமித்தது. அவர் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த அனுமதி வழங்கவில்லை. நமது ஆட்சியின் போது புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர், விதவைகள் உதவி தொகை வழங்க ஏற்பாடு செய்தோம். அப்போது வழங்க அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது உள்ள அரசு அந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்துகிறது.




முதலமைச்சர் ரங்கசாமி முன்பு இந்திராநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த போது தொகுதியை பற்றி கவலைப்படவில்லை. இந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை. இங்கு சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பணிகளை கவுன்சிலர்கள் செய்ய முடியும். இந்த தொகுதியில் தற்போது உள்ள எம்.எல்.ஏ. முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். அவருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து பல உதவிகள் செய்யப்பட்டது. தற்போது அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.


புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு மக்களை பற்றி கவலையில்லை. அவருக்கு ஒரே குறிக்கோள் முதலமைச்சர் நாற்காலி மட்டும் தான். அவர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க வில்லை. புதுச்சேரிக்கு கூடுதல் நிதியை பெற மத்திய மந்திரிகள் யாரையும் சந்திக்கவில்லை. தற்போது சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என  முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார். கூட்டத்தில்  வைத்திய நாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான்,  முன்னாள்   எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், நீல.கங்கா தரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர