பக்ரீத் பண்டிகையின் போது பொது இடங்களில் 50-க்கும் அதிகமான மக்கள் கூடக்கூடாது,குர்பானிக்காக பொது இடங்களில் விலங்குகளை பலியிடக்கூடாது என  உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


உலகளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கியப்பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் ஆகும். இந்நாளில் இப்ராஹிமின் தியாகத்தினை நினைவு கூரும் வகையில், புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் அனைவரும் சிறப்புத் தொழுகைள் நடத்துவார்கள். மேலும் தங்களது வீடுகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் அதனைப் பலியிட்டு அதனை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்குவார்கள். குர்பானி என்று அழைக்கப்படும் இதனை ஆண்டு தோறும் இஸ்லாமியர் மிகச்சிறப்பாக கொண்டாடுவர்கள். மேலும் ஈகைத்திருநாள் என்றழைக்கப்படும்  இந்த பண்டிகை இந்தாண்டு ஜூலை 21 அதாவது வருகின்ற புதன் கிழமை கொண்டாடப்படவுள்ளது. ஆனால் தற்பொழுது கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மதம் சார்ந்த விழாக்கள், திருவிழாக்கள் போன்றவற்றை நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டடுள்ளன..



இந்நிலையில் தான், அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் நிலைப்பாடு மற்றும் 3 வது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகைக்கொண்டாடுவது தொடர்பாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்றினைக் கருத்தில் கொண்டு 50 க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடி பக்ரீத்  பண்டிகைகளை கொண்டாடக்கூடாது என தடை விதித்துள்ளது. மேலும் மசூதிகளின் மேற்கொள்ளும் தொழுகைகளின் போது சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அம்மாநில முதல்வர் யோகி ஆத்யநாத் கூறியுள்ளார்.


இதோடு வருகின்ற ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்றின் 3 வது அலை பரவக்கூடும் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ள நிலையில் பாதுகாப்போடு பக்ரீத் பண்டிகையை கொண்டாட வேண்டும் எனவும், குறிப்பாக இவ்விழாவின் முக்கிய நிகழ்வான குர்பானிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக இம்மாநிலத்தில் மாடு., ஒட்டகம் போன்ற தடை செய்யப்பட்ட விலங்குகளை பலியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளநிலையில் அதிகாரிகள் இதனைக் கண்காணித்துக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதோடு ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை நாளில் விலங்குகளை பலியிட வேண்டும் என்றால்  பொது இடங்களில் மேற்கொள்ளக்கூடாது எனவும்,  இதற்காக நியமிக்கப்பட்டுள்ள இடங்கள் அல்லது தனியார் வளாகங்களை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இம்மாநிலத்தில் தூய்மைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.





முன்னதாக, உத்தரப்பிரதேசத்தில், சிவனின் பக்தர்கள் 2-வது வாரம் கன்வர் யாத்திரையினை வருடம்தோறும் நடத்துவது வழக்கம். இதற்காக பலபகுதிகளில் இருந்து ஹரித்துவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் ஆண்டுதோறும் பாத யாத்திரையாக செல்லும் நிலையில் இந்தாண்டு ஜூலை 25 ஆம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் இதுகுறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்த நிலையில், கொரோனா தொற்றினை கருத்தில் கொண்டு இந்தாண்டு இவ்விழாவினை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உ.பி அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.