47 குழந்தைகள் உள்பட 141 பேரை பலி வாங்கிய குஜராத் மோர்பி பால விபத்து தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மோர்பி பாலத்தின் பராமரிப்பு, செயல்பாடு, பாதுகாப்பு ஆகிய ஒப்பந்தத்தை ஓரேவா என்ற குழுமம் பெற்றிருந்தால் அதன் மீது சந்தேக பார்வை நீண்டது.


இதன் தொடர்ச்சியாக, உள்ளாட்சி நிர்வாகத்தின் மீதும் பல குற்றச்சாட்டுகளை வைக்கப்பட்டன. விபத்து தொடர்பாக, இதுவரை, ஒன்பது ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஓரேவா குழுமத்தின் மேலிட நிர்வாகிகள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.


இதற்கு மத்தியில், ஜாமீன் கோரி கைது செய்யப்பட்ட ஊழியர்கள் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, பாலத்தை மறுசீரமைத்ததிலும் பாலத்தை மீண்டும் திறப்பதிலும் பல குளறுபடிகள் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.


பாலம் அறுந்து விழுந்த நாளான அக்டோபர் 30 அன்று, பாலித்தில் ஏறுவதற்கான 3,165 டிக்கெட்டுகளை ஓரேவா குழுமம் விற்றுள்ளதாக தடயவியல் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்கும் போது மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


பாலத்தில் ஏறுவதற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்படவில்லை என்றாலும் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தின் சுமை தாங்கும் திறனை நிறுவனம் கருத்தில் கொள்ளாமல் டிக்கெட்டை விற்றுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஒப்பந்ததாரர் புதிதாக அமைத்த கனமான தளத்தின் சுமையயை பாலத்தின் பழைய கேபிள்களால் சுமக்க முடியவில்லை என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரேவா குழுமத்தால் பணி அமர்த்தப்பட்ட பாலத்தின் காவலர்களும் டிக்கெட் சேகரிப்பாளரும் தினசரி கூலித் தொழிலாளர்கள் என்றும், கூட்டத்தை நிர்வகிப்பதில் நிபுணத்துவம் இல்லாதவர்கள் என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


 






பாதுகாப்பு நெறிமுறைகள் அல்லது பாலத்தில் எத்தனை பேர் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது பற்றி காவலர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


முன்னதாக, குஜராத் உயர் நீதிமன்றத்தில், விபத்து தொடர்பாக மோர்பி முனிசிபல் கார்ப்பரேஷன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், "பாலம் திறக்கப்பட்டிருக்கக் கூடாது. மச்சு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் பழுதுபார்ப்பதற்காக ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்தது.


குடிமை அதிகாரிகளிடமிருந்து தகுதிச் சான்றிதழ் இல்லாமல், குஜராத்தி புத்தாண்டான அக்டோபர் 26 அன்று பாலம் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டது. மேலும், விபத்துக்கு மாநகராட்சி அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.


மச்சு ஆற்றில் மேல் அமைந்துள்ள பாலம், மீண்டும் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் அறுந்து விழுந்தது. ஒப்பந்தத்தின்படி எட்டு முதல் 12 மாதங்கள் வரை இது மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏழு மாதங்களில், அக்டோபர் 26 அன்று, உள்ளூர் குடிமை அமைப்பால் எந்தவிதமான தகுதி சான்றிதழும் அளிக்கப்படாமல் மீண்டும் திறக்கப்பட்டது.