வரி ஏய்ப்பு செய்ததாக தெலுங்கானா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சாமகுரா மல்ல ரெட்டி மற்றும் அவரது நண்பர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.


ஐதராபாத்தில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெட்டியின் மகன் மற்றும் மருமகன் ஆகிய இருவருக்கும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.


முன்னதாக, தெலங்கானாவில் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவுக்கும் ஆளுநர் தமிழிசைக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தனது போன் ஒட்டு கேட்கப்படுவதாக பகீர் குற்றச்சாட்டை மாநில அரசின் மீது சுமத்தியுள்ளார்.


"எனது தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டதோ என்று நான் சந்தேகிக்கிறேன். குறிப்பாக, ஆளுநருக்கு மரியாதை கொடுப்பதில் ஜனநாயகமற்ற சூழல் மாநிலத்தில் உள்ளது. இவை அனைத்தையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்றார்.


சமீபத்தில், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்எல்ஏக்களை கட்சி மாறி பாஜகவில் இணைக்க மூவர் முயற்சி மேற்கொண்டதாக அம்மாநில காவல்துறை தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தை மாநில ஆளுநருடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பதிவிடப்படுவதாக தமிழிசை குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இதுகுறித்து அவர் விரிவாக விளக்கவில்லை. இதற்கிடையே தெலுங்கானா பல்கலைக்கழகங்களின் பொது ஆட்சேர்ப்பு வாரிய மசோதா, 2022ஐ நிறைவேற்றுவதில் ஆளுநர் தாமதம் செய்வதாக மாநிலக் கல்வித் துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியிருந்தனர். அதிகாரிகள் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். இந்த தாமதம் ஆளுநர் மற்றும் மாநில அரசு இடையேயான உறவில் மேலும் பிரச்சினையை தூண்டியுள்ளது.


சமீபத்தில், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாநில அரசுக்கு எதிராக தமிழிசை பரஸ்பர குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். அதில், தெலங்கானா அரசாங்கம் தன்னை அவமானப்படுத்துவதாகவும் அவமதிப்பதாகவும் கூறியிருந்தார். இது, மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது. 
மாநில அரசு ஆளுநரை எந்த வகையிலும் அவமானப்படுத்தவில்லை என ஆளும் கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள், தமிழிசையின் குற்றச்சாட்டு நிராகரித்துள்ளனர். பாஜக தலைவர் போல் ஆளுநர் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.






தமிழ்நாட்டில் ஆளுநரை திரும்ப பெறக் கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் குடியரசு தலைவரிடம் புகார் அளித்துள்ளனர். கேரளாவில் ஆளுநரின் அதிகாரங்களை குறைக்க மாநில அரசு சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.