குஜராத் மோர்பி பால கோர விபத்து கடவுளின் விருப்பம் என பாலத்தைப் பராமரிக்கும் பொறுப்பு வகித்து வந்த ஓரேவா நிறுவனத்தின் மேலாளர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார்.
9 பேர் கைது
கடந்த அக்டோபர் 30ஆம் தேதி மாலை 6.42 மணிக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி தொங்கு பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 135 பேர் உயிரிழந்தனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்த போது எதிர்பாராமல் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.
முன்னதாக இந்தப் பால விபத்து தொடர்பாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஒன்பது நபர்களில் ஒருவரும், இந்தப் பழமையான பாலத்தை கடந்த 150 ஆண்டுகளாக பராமரிக்கும் பொறுப்பில் இருந்து வந்த ஓரேவா நிறுவனத்தின் தற்போதைய மேலாளருமான தீபக் பரேக், ‘பாலம் இடிந்து விழுந்தது கடவுளின் விருப்பம்’ எனத் தெரிவித்துள்ளார்.
’கடவுளின் விருப்பம்’
”இது போன்ற துரதிர்ஷ்டவசமான ஒரு நிகழ்வு நடைபெற்றது கடவுளின் விருப்பம் (Bhagwan ki ichcha)" என்று அவர் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் எம்.ஜே. கான் முன் தெரிவித்துள்ளார்.
மோர்பி துணைக் காவல் கண்காணிப்பாளர் பி.ஏ.சாலா இது குறித்து பேசுகையில், பாலத்தின் கேபிள் துருப்பிடித்துவிட்டது என்றும், பாலத்தை புதுப்பித்த நிறுவனம் இந்தக் கேபிளை மாற்றவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரசு அனுமதியோ அல்லது தரப் பரிசோதனையோ இன்றி, கடந்த அக்டோபர் 26ஆம் தேதி இந்தப் பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
"பாலம் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணியாக, பிளாட்பாரம் மட்டும் மாற்றப்பட்டது. பாலத்தின் கேபிளில் எண்ணெய் தடவப்பட்டோ, கிரீஸ் தடவப்பட்டோ பராமரிக்கப்படவில்லை. கேபிள் உடைந்த இடத்தில் இருந்து கேபிள் துருப்பிடித்துள்ளது. கேபிளை சரி செய்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது" என்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் பி.ஏ.சாலா தெரிவித்துள்ளார்.
தலைமறைவான ஓரேவா நிறுவன நிர்வாக இயக்குநர்
மோர்பி பாலம் இன்னும் எட்டு முதல் 10 ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்கும் என முன்னதாக பாலத்தைத் திறந்து வைத்துப் பேசிய ஓரேவா நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெய்சுக்பாய் படேல், விபத்து நிகழ்ந்த நாள் முதல் தலைமைறைவாக இருந்து வருகிறார். அகமதாபாத்தில் உள்ள ஓரேவா நிறுவனத்தின் பண்ணை வீடும் ஆள்நடமாட்டமின்றி இருந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.
காவல்துறையினரால் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ஒரேவா நிறுவனத்தின் உயர் மட்ட அலுவலர்கள் பெயர்களோ, நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கிய நகராட்சி அலுவலர்களின் பெயர்களோ குறிப்பிடப்படவில்லை.
ஓரேவா குழுமத்தின் மற்றொரு மேலாளர் தீபக் பரேக் மற்றும் பாலத்தை சரிசெய்த இரண்டு துணை ஒப்பந்ததாரர்கள் சனிக்கிழமை வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பாலத்தின் பாதுகாவலர்கள் மற்றும் டிக்கெட் புக்கிங் கிளார்க்குகள் உள்பட ஐந்து பேர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.