டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


டெல்லியைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவர் காய்ச்சல் மற்றும் தோல் புண்கள் காரணமாக மௌலானா ஆசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு வெளிநாடு பயணமும் மேற்கொள்ளாத நிலையில் அந்த நபருக்கு எப்படி குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என சுகாதாரத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் டெல்லி விமானம் நிலையத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன்மூலம் இந்தியாவில் குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 


முன்னதாக உலகம் முழுவதும் தீவிரமாக குரங்கம்மை நோய் பரவி வரும் நிலையில் இந்த தொற்றால் இதுவரை 14 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்ததாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. எனினும் குரங்கம்மை நோய் என்பது தொற்று நோய் என்பதால் சர்வதேச நாடுகள் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் மற்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் மற்ற மாநிலங்களின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 






இதனைத் தொடர்ந்து  தமிழ்நாட்டில் தற்போது வரை குரங்கம்மை நோய் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என்றும், தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து பன்னாட்டு விமானங்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதனிடையே இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 13 ஆம் தேதி துபாயிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு வந்த ஒருவர் கேரளாவின் கண்ணூரை அடுத்து உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.


அதன்பின் ஜூலை 22 ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த  3வது நபர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.  35 வயது நபர்  கடந்த ஜூலை 6 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் மலப்புரத்திற்கு வந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் அவருக்கு 15 ஆம் தேதி முதல் குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண