இந்தியாவில் பொதுவாக குரங்குக் கூட்டங்கள் மனிதர்களின் வாழ்விடத்துக்கு நெருக்கமாக இடங்களில் வசித்து வரும் நிலையில், அவை மனிதர்களிடம் செய்யும் சேட்டைகளும் அச்சுறுத்தல்கள் தொடர்பான சம்பவங்களும் வழக்கமானவை ஆகிவிட்டன.


மனிதர்களை ஒத்த பண்புகளைக் கொண்டிருப்பதால் மனிதர்கள் செய்யும் எந்த சேட்டைகளுக்கும் குறைவில்லாமல் அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அனைத்து சம்பவங்களிலும் குரங்குகள் ஈடுபட்டு வருகின்றன.


அந்த வகையில், முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் மதுபானக் கடைகளுக்குள் புகுந்த குரங்கு ஒன்று பீர் பாட்டிலை திருடிச் சென்று குடிக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.


உத்தரப்பிரதேசம், ரேபரேலியில் உள்ள அச்சல்கஞ்ச் பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடைகளுக்குள் புகுந்து, பீர் பாட்டிலை குரங்கு திருடிச் செல்லும் இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது. இந்தக் குரங்கு ஏற்கெனவே இதேபோல் கடைக்கு வந்த மதுப்பிரியர்களிடம் இருந்து பாட்டில்களைத் திருடி உள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


வீடியோவில், கேனை திருடிச் செல்லும் குரங்கு ஒரு ஓரத்தில் அமர்ந்து ஒரு தேர்ந்த மதுப்பிரியர் போல் மது அருந்தும் நிலையில், குரங்கு மது குடிப்பது இது முதல் முறையாக இருக்காது, இந்தக் குரங்கு மதுவுக்கு அடிமையாகி இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.


 






இந்நிலையில், இந்தக் குரங்கு குறித்து கவலை தெரிவித்துள்ள கடைக்காரர், குரங்கை விரட்டினால் அது  கடித்துக் குதற வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி வன அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பிற மதுபானக் கடைக்காரர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.


இந்நிலையில், வனத்துறையினரின் உதவியுடன் இந்தக் குரங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.


முன்னதாக ஜார்க்கண்டில் உள்ள அரசுப்பள்ளியில் குரங்கு ஒன்று மாணவர்களுடன், மாணவராக அமர்ந்து வகுப்பை கவனிக்கும் புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.


ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது ஹசரிபாக். இங்கு அரசுப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளி அமைந்துள்ள பகுதியில் காடுகள், மரங்கள் அதிகளவில் இருப்பதால் குரங்குகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த குரங்குகள் அவ்வப்போது ஹசரிபாக் பகுதியில் உள்ள  வீடுகள் மற்றும் கட்டிடங்களில் மிகவும் எளிமையாக இந்த குரங்குகளை காண முடியும்.






இந்த நிலையில், ஹசரிபாக்கில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவர்களுடன், மாணவர்களாக குரங்கு அமர்ந்து ஆசிரியர் பாடம் எடுப்பதை கவனிக்கும் வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.