புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஃபேஸ்புக்கில் கமெண்ட் செய்த பொறியியல் மாணவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு நிகழ்ந்த புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஒரு தற்கொலைப் படை தீவிரவாதி வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை பேருந்து மீது மோதிய நிலையில், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு அப்ப்போது 2,500 பணியாளர்கள் 78 பேருந்துகளில் பயணித்தனர். இந்த புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உள்துறை அமைச்சகம் 'பயங்கரவாதிகள்' என்று அறிவித்தது.
இந்நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் ஃபேஸ்புக்கில் முன்னதாக அவதூறாகப் பதிவு செய்த பொறியியல் மாணவருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள கச்சரக்னஹள்ளியில் வசிக்கும் ஃபைஸ் ரஷீத்தின் எனும் இந்நபர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அப்போது தொடங்கி அவரது ஜாமீன் விண்ணப்பங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வருகிறார்.
புல்வாமா தாக்குதல் தொடர்பாக அவர் பல கமெண்டுகளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்த நிலையில், அவரது போன் கைப்பற்றப்பட்டு தடய அறிவியல் ஆய்வகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக ரஷீத் ஃபேஸ்புக்கில் கமெண்ட்களை செய்தபோது அவருக்கு 19 வயதுதான், எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என எதிர் தரப்பு வழக்கறிஞர் சார்பில் வாதம் செய்யப்பட்டது. ஆனாலும் நீதிபதிகள் அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் (IPC) 153ஐ (மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 124A (தேசத்துரோகம்) மற்றும் 201 (குற்றச் சான்றுகள் காணாமல் போனது) மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) பிரிவு 13 ஆகியவற்றின் கீழ் ரஷீத்துக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்துள்ளது.