பொதுவாக ஐரோப்பிய நிலப்பரப்பில் காணப்படும் பண சிலந்திகள் (Money spider), முதன்முறையாக வயநாடு வனவிலங்கு சரணாலயத்தின் முத்தங்கா மலைத்தொடரில் காணப்பட்டது பதிவாகியுள்ளது. அதைப் பார்க்கும் நபர்களுக்கு இந்தச் சிலந்தி அதிர்ஷ்டம் தருவதாக நம்பப்படுவதால் அது இந்தப் பெயரால் அழைக்கப்படுகிறது. 


திருச்சூர், இரிஞ்சாலக்குடாவில் உள்ள கிறிஸ்ட் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், ப்ரோசோபோனாய்ட்ஸ் இனத்தின் ட்வார்ஃப் சிலந்திகள் குடும்பத்தைச் சேர்ந்த இந்த எட்டுக்கால்பூச்சியைக் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு Prosoponoides biflectogynus என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது.


"இந்த இனத்தைச் சேர்ந்த ஆறு வகையான சிலந்திகள் மட்டுமே இதுவரை உலகம் முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது இந்தியாவில் இருந்து இந்த இனத்தின் முதல் பதிவு, எனவே நாட்டில் இந்த வகை சிலந்திகள் குறித்து விரிவான ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை, ”என்று கிறிஸ்ட் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் டாக்டர் சுதிகுமார் கூறியுள்ளார். கிறிஸ்ட் கல்லூரியின் விலங்கு வகைபிரித்தல் மற்றும் சூழலியல் மையத்தின் ஆராய்ச்சி அறிஞர்களான அதிரா ஜோஸ் மற்றும் விஷ்ணு ஹரிதாஸ் ஆகியோர் இந்த ஆராய்ச்சிக் குழுவில் உள்ளனர்.


மானந்தவாடி மலைத்தொடரில் ஜம்பிங் ஸ்பைடர்ஸ் குழுவைச் சேர்ந்த எறும்புகளைப் பிரதிபலிக்கும் சிலந்திகளையும் கண்டுபிடித்துள்ளனர். அவை சால்டிசிடே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆண் மற்றும் பெண் பண சிலந்திகள் பொதுவாக முறையே 3 மிமீ மற்றும் 4 மிமீ நீளம் கொண்டவை. இரு பாலினங்களும் அடர் பழுப்பு நிறத்தில் உள்ளவை. அவற்றின் ஆலிவ் பச்சைக் கால்களில் பல மெல்லிய கருப்பு முட்கள் உள்ளன. எட்டு இருண்ட கண்கள் இரண்டு வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன.


பெண்கள் உலர்ந்த மரக்கிளைகளுக்கு இடையில் முக்கோண வலைகளை உருவாக்கி சிறிய பூச்சிகளை உண்ணும் அதே வேளையில் ஆண் சிலந்திகள் உலர்ந்த இலைகளுக்கு அடியில் மறைந்து கொள்ள விரும்புகின்றன. ஒரு பெண்ணின் வலையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண் சிலந்திகளைக் காணலாம். எறும்பைப் பிரதிபலிக்கும் சிலந்திக்கு Toxeus alboclavus என்று பெயரிடப்பட்டுள்ளது. இலைக் குப்பைகளில் இருந்து இந்த வகை ஜம்பிங் ஸ்பைடர்ஸ்களை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்தனர்.


"அவை வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்க ஒரு வழியாக தாங்கள் நடக்கும்போது தங்கள் முன் இருஜோடி கால்களைத் தூக்கி எறும்புகளைப் பிரதிபலிக்கின்றன. இந்த இனத்தின் மூன்று இனங்கள் மட்டுமே இந்தியாவில் இருந்து பதிவாகியுள்ளன, இதுவே மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து பதிவாகிய முதல் இனமாகும்" என்று டாக்டர் சுதிகுமார் குறிப்பிட்டார். இந்த இனத்தின் ஆண் மற்றும் பெண் சிலந்திகள் முறையே 4 மிமீ மற்றும் 6 மிமீ நீளம் வரை வளரும். பெண் சிலந்திகளின் அடர் பழுப்புநிற வயிற்றில் ஒரு ஜோடி வெள்ளை நிற கோடுகள் இந்த குழுவின் மற்ற சிலந்திகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. ஒவ்வொரு காலின் அடிப்பகுதியிலும் நீண்ட முட்கள் உள்ளன.