உத்தரபிரதேசத்தில் 30 வயது பெண், அவரது வளர்ப்பு மகன், கணவர் மற்றும் அவரது நண்பர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கருணைக்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.


நீதித்துறையில் தான் நம்பிக்கை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், "நீதியின் மீதான நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன். நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தபோதிலும், அக்டோபர் 9 அன்று புரான்பூர் கோட்வாலி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட எவரும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் என்னை பேச விடாமல் தடுக்கிறார்கள். மேலும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டுகிறார்கள்.


விவாகரத்து செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஏப்ரல் மாதம் சண்டிகரைச் சேர்ந்த 55 வயது விவசாயி ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். சிறிது நாள்கள் கழித்து, இரண்டாவது கணவரின் மகன் என்னை அணுகி தகாத உறவுக்கு வற்புறுத்தினார். மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் என்னை மிரட்டினார்.


இதைத் தொடர்ந்து, அவர் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தார். பின்னர், அவர் அடிக்கடி அணுகி பாலியல் வன்கொடுமை செய்தார். நான் கர்ப்பமாகி, டிஎன்ஏ பரிசோதனைக்கு செல்ல விரும்பினேன். ஆனால், அவர் புரான்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தினார்.


ஜூலை 18 அன்று, நான் சண்டிகரில் உள்ள எனது கணவரின் பண்ணை வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு எனது கணவர், கணவரின் நண்பர், உறவினர் மற்றும் அவரது சக ஊழியர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். புரான்பூர் காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தேன். ஆனால், எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதிமன்றம் செல்வதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. இதையடுத்து, இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது" என்றார்.


இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 376 டி (கூட்டு பாலியல் வன்கொடுமை), 323 (தன்னிச்சையுடன் காயப்படுத்துதல்) மற்றும் 504 (வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் புரான்பூர் கோட்வாலி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிலிபிட் காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் குமார் பிரபு தெரிவித்தார். முதல் தகவல் அறிக்கையில், அவரது கணவர், அவரின் மகன் உட்பட 5 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.


இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது சிக்கலான வழக்கு என்பதால் கால அவகாசம் எடுக்கிறது என்றும் அந்தப் பெண் தற்போது தனது தாய், இரண்டு சகோதரர்கள் மற்றும் அவரது ஆறு வயது மகனுடன் தங்கியுள்ளார் என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ் தெரிவித்துள்ளார்.