1984ஆம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தை மேற்கோள் காட்டி காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா, பல சீக்கியர்கள் மூன்றே நாள்களில் கொல்லப்பட்டதாக கூறினார்.
கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பான பொய் குற்றச்சாட்டுகளால் பிரதமர் மோடி 19 ஆண்டுகளாக வாய் திறக்காமல் வலியை சகித்து கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வழக்கிலிருந்து பிரதமர் மோடி விடுவிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்திய நிலையில், சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதாக அமித் ஷா கூறியுள்ளார்.
பண மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கடுமையாக விமரிசித்த அமித் ஷா, "பொய் குற்றச்சாட்டுகளால் 19 ஆண்டுகளாக மோடி அமைதியாக துன்பத்தை அனுபவித்தார். ஆனால், யாரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை" என ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து வரிவாக பேசிய அவர், "உண்மையின் பக்கம் இருந்தும், நீதி விசாரணை நடந்துகொண்டிருப்பதால், அவர் பேசாமல் இருந்தார். மோடி இந்த வலியை சகித்துக்கொள்வதை நான் நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். திடமான இதயம் கொண்ட ஒரு மனிதனால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.
ஜனநாயக நாட்டில், அரசியல் சாசனத்தை அனைத்து அரசியல் பிரமுகர்களும் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை பிரதமர் மோடி முன்வைத்தார். மோடி விசாரிக்கப்பட்டார், ஆனால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேலும் நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் மோடிக்காக திரளவில்லை. நாங்கள் சட்டத்திற்கு ஒத்துழைத்தோம். நானும் கைது செய்யப்பட்டேன். எந்த வித போராட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்தப்படவில்லை" என்றார்.
கலவரத்தை அடக்க ராணுவம் தாமதமாக அழைக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு மறுத்த அமித் ஷா, "மதிப்பு மிக்க முன்னாள் பஞ்சாப் காவல்துறைத் தலைவர் கேபிஎஸ் கில், மாநில அரசின் நடவடிக்கை நடுநிலையுடனும் உடனடியாக இருந்ததாகவும் கூறினார்" என்றார்.
1984ஆம் ஆண்டு, சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தை மேற்கோள் காட்டி காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா, பல சீக்கியர்கள் மூன்றே நாள்களில் கொல்லப்பட்டதாக கூறினார்.
இதுபற்றி விரிவாக பேசிய அமித் ஷா, "குஜராத் அரசு எதிலும் தாமதிக்கவில்லை. குஜராத்தில் பந்த் அறிவிக்கப்பட்டபோது ராணுவத்தை அழைத்தோம். இராணுவம் அடைய சிறிது நேரம் தேவைப்பட்டது. குஜராத் அரசு ஒரு நாள் கூட தாமதிக்கவில்லை, இதை நீதிமன்றமும் பாராட்டியது" என்றார்.