ஜீரோ டூ ஹீரோ: அசுர வளர்ச்சி அடைந்த பாஜக:


மதச்சார்பின்மையை சுற்றி சுழன்று கொண்டிருந்த இந்திய அரசியலை 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்துத்துவ என்ற அரசியல் கொள்கையை சுற்றி சுழல வைத்து வருகிறது பாஜக. கடந்த 1984ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், 2 இடங்களை மட்டுமே வென்ற பாஜக, அசுர வளர்ச்சி அடைந்து, 2014ஆம் ஆண்டு தேர்தலில் 282 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. அதன் பின்னர், 2019ஆம் ஆண்டு தேர்தலில் 303 இடங்களை கைப்பற்றியது.


இந்த நிலையில், அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடத்தப்பட உள்ள இந்த தேர்தல், அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏன் என்றால், இந்தியாவின் முதல் பிரதமர் நேருவை தவிர வேறு யாரும் தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமராக பதவி வகித்ததில்லை. 


இந்திரா காந்தி, மொத்தமாக 15 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்தார். ஆனால், முதல் பதவிக்காலத்தில் 11 ஆண்டுகளும், 1980ஆம் ஆண்டிலிருந்து படுகொலை செய்யப்படும் வரை 4 ஆண்டுகளே பிரதமராக பதவி வகித்தார். ஆட்சி கட்டிலில் 11 ஆண்டுகளுக்கு மேல் இருந்ததில்லை. நாட்டின் வலிமையான பிரமதராக கருதப்படும் இந்திரா காந்தியே,  1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.


நேரு, இந்திரா காந்தி வரிசையில் மோடி:


இப்படிப்பட்ட சூழலில்தான், அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த தேர்தலில் பாஜக வெற்றிபெறும் பட்சத்தில், நேருவுக்கு அடுத்தப்படியாக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தவர் என்ற பெருமை பிரதமர் மோடியை சாரும். அதை சாத்தியமாக்கதான் பாஜக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான பணிகள பாஜக ஏற்கனவே செய்ய தொடங்கிவிட்டது.


மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட வியூகத்தை அமைத்து, பிரச்னைகளை கையில் எடுத்து, அரசியல் விளையாட்டுகளை ஆடி வருகிறது பாஜக. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காய்களை நகர்த்தி வருகிறது. எங்கெல்லாம் ஒப்பிட்டளவில் பலம் குறைந்த இடங்களாக கருதுகிறார்களோ அங்கெல்லாம் இதை செய்து வருகிறார்கள்.


தமிழ்நாட்டில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கிடையே அதிகார போட்டி நிலவி வந்த நிலையில், இருவருடனும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால், தற்போது, உச்ச நீதிமன்றமும் இந்திய தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்திருக்கும் நிலையில், தன்னுடைய நிலைபாட்டை சாதுரியமாக மாற்றியுள்ளது பாஜக மேலிடம்.


பன்னீர்செல்வத்தை கைகழுவியதா பாஜக?


வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்திற்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே அழைக்கப்பட்டுள்ளார். பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. முழுவதும் பயன்படுத்தி கொண்டு, தற்போது பன்னீர்செல்வத்தை பாஜக கைகழுவி விட்டதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.


மகாராஷ்டிராவை பொறுத்தவரையில், ஆட்சி நடத்தி வந்த சிவசேனா இரண்டாக பிளவுப்பட்ட நிலையில், அதே நிலைமைதான் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது. அரசியலில் உச்சக்கட்ட திருப்பமாக, எதிர்க்கட்சியாக இருந்த தேசியவாத காங்கிரஸ், அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் பவாரின் ஒப்புதலின்றி, ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணி அரசாங்கத்தில் இணைந்திருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார். அவருடன், அக்கட்சியை சேர்ந்த 8 மூத்த தலைவர்கள், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.


தேசியவாத காங்கிரஸில் ரிப்பிட்டாகும் சிவசேனா எபிசோட்:


எதிர்க்கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றை உடைப்பதில் பாஜக மூத்த தலைவர்கள் பெரும் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. இதில், கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றிய சரத் பவாரின் சொந்த கட்சி பிளவுப்பட்டிருப்பதுதான்.


அதேபோல, அடுத்தபடியாக, பாஜக எதிர்ப்பை கையில் எடுத்து தீவிரமாக செயல்பட்டு வந்தவர் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ். ஆனால், இப்போது கதையே வேறு. அவரின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட தொடங்கியுள்ளது. வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஹைதராபத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால், அதில் கூட பங்கேற்காமல் தனது எதிர்ப்பை பதிவு செய்தவர் கே.சி.ஆர்.


கே.சி.ஆருடன் நெருக்கம்:


இப்படிப்பட்ட கே.சி.ஆர்தான், பிரதமர் மோடியை நல்ல நண்பர் எனக் குறிப்பிட்டு திடீரென அதிர்ச்சி தந்துள்ளார். இதை தொடர்ந்து, 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட பாட்னா கூட்டத்தை புறக்கணித்தது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்தது. பாஜகவுடன் கே.சி.ஆரின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி நெருக்க காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.


இதற்கு மத்தியில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதிநிதியை அனுப்பியது பாரத் ராஷ்டிர சமிதி. கடந்த இரண்டு வருடங்களாக, மத்திய அரசு கூட்டும் கூட்டங்களை அக்கட்சி புறக்கணித்து வந்தது. இந்த சூழ்நிலையில், கே.சி.ஆரின் இந்த நடவடிக்கை பாஜகவை நோக்கி அவர் செல்கிறாரா? என சந்தேகத்தை கிளப்பியுள்ளது.


எதிர்க்கட்சி கூட்டம் நடக்கும் அதே ஜூலை 18ஆம் தேதி, தன்னுடைய கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து, மக்களின் கவனம் அங்கு சென்றிராதவாறு சாதுரியமாக காயை நகர்த்தி உள்ளது பாஜக.