ராஜஸ்தானில் கொடூரம்:
தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், சாதிய கொடூரங்கள் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சம்பவம், கேட்கும் போதே மனதை பதற வைக்கும் வகையில் அமைந்துள்ளது. கிழக்கு ராஜஸ்தானில் உள்ள கரௌலி நகரில் உள்ள ஏரியில் இருந்து தலித் சமூகத்தை சேர்ந்த 19 வயது பெண்ணின் உடல் எடுக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன என்பதை விவரிக்க முடியாத அளவுக்கு அவரின் தாயார் அரசு மருத்துவமனையின் பிணவறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். தன்னுடை மகளுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பேசிய அவர், "நானும் எனது நான்கு குழந்தைகளும் வீட்டில் இருந்தோம் (ஜூலை 11-12 இரவு). ஆட்கள் வரும்போது நாங்கள் அனைவரும் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தோம்.
மார்பில் தோட்டா காயம், சிதைத்துபோன முகம்:
ஏதோ சத்தம் கேட்டு எழுந்தேன். எனது மகளை அந்த ஆட்கள் அழைத்துச் செல்வதைக் கண்டதும் நான் கத்த ஆரம்பித்தேன். ஆனால், யாரும் சொல்வதைக் கேட்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரர் யாரும் உதவிக்கு வரவில்லை. காரின் இன்ஜின் ஆன் ஆக இருந்ததால், அவரை உள்ளே தூக்கி போட்டு கொண்டு வேகமாக சென்றனர்.
மார்பில் தோட்டா பாய்ந்தபடி, இப்போது அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது.
கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்" என்றார்.
அடையாளம் தெரியாத வகையில் அவரது முகத்தை சிதைக்க அமிலம் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இளம் பெண் கொலை செய்யப்பட்ட கொடூரமான விதம் அவரது குடும்பத்தினரையும் ஒட்டுமொத்த மாநிலத்தையுமே உலக்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த கொலை சம்பவம் அரசியல் ரீதியாக பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், "அக்கம்பக்கத்தினர் தங்கள் வீடுகளில் குளிரூட்டிகள் மற்றும் மின்விசிறிகளை வைத்திருந்ததால் என் கூச்சலைக் கேட்கவில்லை. இரவு என்பதால் யாருடைய முகமே நினைவில் இல்லை. பாதிக்கப்பட்ட இளம்பெண் பிஏ படித்து வருகிறார். அவரது இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் அனைவரும் மைனர்கள். இவர்களது தந்தை கடந்த ஆறு வருடங்களாக துபாயில் கூலி வேலை செய்து வருகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உறவினர் கூறுகையில், "காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முடியாத அளவுக்கு அவரது குழந்தைகள் இளையவர்களாக இருந்தனர். எனவே, தாயார் ஜெய்ப்பூரில் இருந்து ஒரு உறவினரை அழைத்தார். அவர் புதன்கிழமை காலை 10 மணியளவில் கிராமத்தை சென்றடைந்தார். சுமார் 10 பேர் அவரை பல மணி நேரம் தேடியும் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. மாலையில் காவல் நிலையத்தை அணுகினோம்" என்றார்.