அதிமுக, பாஜக கூட்டணிக்கு இடையே சலசலப்பு நிலவி வரும் நிலையில், இந்த கூட்டணி தொடருமா? என கேள்வி எழும் அளவுக்கு தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக இருந்து வந்தது. இரண்டு கட்சிகளுக்கு இடையே மோதல் நிலவி வந்த நிலையில்தான் கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க. கூட்டணியை உறுதி செய்து பேசியிருந்தார்.


இதையடுத்து, அமித்ஷா இவ்வாறு கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இதைதான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம். நாடாளுமன்ற தேர்தலுக்கும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தொடரும். அதிமுக கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது" என எடப்பாடி பழனிசாமி உடைத்து பேசினார்.


அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பமா?


நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணிக்கு இடையேயான பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக கருதப்பட்டது.


அதற்கு ஏற்றார்போல், மத்திய இணை அமைச்சர் எல். முருகனும், அதிமுகவுடனான கூட்டணிக்கு ஆதரவான கருத்தை தெரிவித்திருந்தார். இருப்பினும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மட்டும், வேறு விதமான கருத்தை தெரிவித்து வந்தார். 


இந்த சூழ்நிலைக்கு மத்தியில், ஒருநாள் பயணமாக இன்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைத்தார். 


சந்திப்பை தவிர்த்த பிரதமர் மோடி:


இந்த பயணத்தின்போது, ஏதேனும் அரசியல் நகர்வு நடத்தப்படுமா? என பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால், அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக  தமிழ்நாட்டுக்கு வருவதால் இருவருக்கிடையே சந்திப்பு நடக்குமா? என பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 


அதற்கு ஏற்றார் போல், அரசு நிகழ்ச்சிகளுக்கு நடுவே பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பானி பழனிசாமியும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் தனித்தனியே நேரம் கேட்டிருந்ததாக தகவல் வெளியானது. மோடி, இருவரையும் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.


சந்திக்காத பிரதமர் மோடி:


ஆனால், சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்க சென்றதோடு சரி, பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் மோடி தனியாக சந்திக்கவில்லை. இது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஒன்றுபட்ட அதிமுகவையே பாஜக விரும்புவதாகவும், இதன் காரணமாக இந்த சந்திப்பை மோடி தவிர்த்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


அதுமட்டும் இன்றி, பழனிசாமியை தனியாக சந்தித்தாலோ அல்லது பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்தாலோ அது தலைவர்கள் இடையே நெருடலை ஏற்படுத்தும் என்பதால் அனைத்து சந்திப்பையும் மோடி தவிர்த்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பழனிசாமி, மோடி ஆகியோருக்கிடையே சந்திப்பு நடந்திருக்கும்பட்சத்தில் இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டிருக்க வாய்ப்பிருந்ததாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.