நாட்டில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்துள்ளார்.
5,200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள்:
சென்னை விமான நிலைய பன்னாட்டு முனைய திறப்பு விழா, சென்னை - கோவை வந்தே பாரத் தொடக்க விழா, ராமகிருஷ்ணா மடத்தின் 125ஆவது ஆண்டு விழா ஆகியவற்றில் கலந்து கொண்டதை தொடர்ந்து பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 5,200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியின்போது அடிக்கல் நாட்டினார். தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்த மோடி, 37 கி.மீ. தூர திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
பின்னர், மதுரை - செட்டிக்குளம் உயர்மட்ட பாலம், நத்தம் - துவரங்குறிச்சி 4 வழிச்சாலையையும் மோடி திறந்து வைத்துள்ளார். திருமங்கலம் - வடுகப்பட்டி - தெற்குவெங்கநல்லூர் இடையே 4 வழிச்சாலை திட்டத்திற்கு மோடி அடிக்கல் நாட்டினார்.
பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளம், தகவல்ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மோடி பயணம்:
முன்னதாக, பிரதமர் மோடி இன்று மதியம் 1.35 மணிக்கு ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் சென்னைக்கு 2.45 மணிக்கு வந்தார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி, 2,400 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்ட, ஒருங்கிணைந்த விமான முனையத்தை திறந்து வைத்தார்.
சென்னைக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி டி.ஜி.பி சைலேந்திர பாபுவின் உத்தரவின் பேரில் 22ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினரின் தொடர் போராட்டம் காரணமாக, இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தரப்பில் வெளியான தகவலின் பேரில் காங்கிரஸ் கட்சியினர் போலீசார் பாதுக்காப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.
மேலும் படிக்க: CM Stalin Speech: "வந்தே பாரத் ரயில் டிக்கெட் விலையை குறையுங்க.." பிரதமர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரவெடி..!