சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்தவும் செமஸ்டர் முறையை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான முன் வரைவை வெளியிட்டுள்ளது.


தேசிய கல்வி கொள்கை:


மத்தியக் கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் முன் வரைவை வெளியிட்டுள்ளது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் பங்குகொண்டு, கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


தேசிய கல்விக் கொள்கையை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு 2020ஆம் ஆண்டு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் படிப்படியாக கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் முன் வரைவை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தொடக்க நிலை பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் வகுப்பு வரை எழுத்துத் தேர்வு தேவையில்லை என்று புதிய கல்விக்கொள்கையின் முன் வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல ஆண்டுக்கு 2 முறை சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வை நடத்தவும் செமஸ்டர் முறையை அறிமுகம் செய்யவும் முன் வரைவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 


பாடங்களை இணைத்துப் படிக்கலாம்


சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பைப் பொறுத்தவரை தற்போது குறைந்தபட்சம் 5 பாடங்களையும் அதிகபட்சம் 6 பாடங்களையும் படித்துத் தேர்வு எழுத வேண்டும். அதேபோல இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களைப் படிக்கும் மாணவரால், அதே நேரத்தில் வரலாறு அல்லது அரசியல் அறிவியலைப் படிக்க முடியாது. ஆனால் தற்போது பரிந்துரை செய்யப்பட்ட முறையின்படி, கலை, மானுடவியல் மற்றும் அறிவியல் பாடங்களை இணைத்துப் படிக்கலாம். 


அதிக கொள்குறி வகை வினாக்கள் 


10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2024ஆம் ஆண்டு தேர்வின்போது அதிக அளவிலான கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்படும். இந்த வகையில் 40 சதவீதக் கேள்விகள் அமைந்திருக்கும். அதேபோல குறைந்த அல்லது நீளமான பதில்களை எழுதத் தேவையான விரித்து எழுதும் வகை வினாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  


ஆண்டுக்கு இரு முறை தேர்வு வைப்பதன் மூலம், மாணவர்கள் படித்து முடித்து அடுத்த தேர்வுக்குத் தயார் ஆகலாம். இதன்மூலம் மாணவர்கள் மீதான சுமையும் அழுத்தமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


2ஆம் வகுப்பு வரை எழுத்துத் தேர்வு தேவையில்லை


அதேபோல தொடக்க நிலை பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் வகுப்பு வரை எழுத்துத் தேர்வு தேவையில்லை என்று புதிய கல்விக்கொள்கையின் முன் வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளைகளுக்குத் தொடக்க நிலை தேசிய பாடத்திட்ட வடிவமைப்பை(NCF for foundational stage - NCF FS) மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்விக்கான அடுத்த தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு தயார் செய்யப்பட்டு வருகிறது. 


தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு கடந்த ஆண்டுகளில் 1975, 1988, 2000 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் 4 முறை திருத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் 5ஆவது முறையாக தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு மாற்றபட உள்ளது குறிப்பிடத்தக்கது.