பாஜகவை வீழ்த்த ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள்:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜகவை வீழ்த்தும் ஒற்றை எண்ணத்துடன் ஒரு அணியில் சேர்ந்த எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது.


இதைதொடர்ந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதில், கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் சூட்டப்பட்டது. தொடர்ந்து, கூட்டணியின் அடுத்த கட்ட பணிகள் தொடர்பாக ஆலோசிக்க மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


"I.N.D.I.A கூட்டணியை பாப்புலர் ஆக்கியவர் மோடி”


இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எங்கே சென்றாலும், எங்கே பேசினாலும் தன்னுடைய ஆட்சியின் சாதனைகளைச் சொல்லாமல் எங்களைப் பற்றியே பேசி எங்கள் கூட்டணிக்கு சிறந்த 'பப்ளிக் ரிலேஷன் ஆபீஸராக' 'பிரைம் மினிஸ்டர்' மோடி செயல்பட்டு வருகிறார்.   I.N.D.I.A கூட்டணியை பாப்புலர் ஆக்கியதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


9 ஆண்டுகள் ஆட்சி செய்தும் சொல்வதற்கு சாதனைகளே இல்லாத ஆட்சி மத்திய பா.ஜ.க ஆட்சிதான். சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றிப் பேசாமல் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கிறார். மோடி ஆட்சி நாளுக்குநாள் ‘unpopular’  ஆகி வருகிறது. இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் ‘popular’ ஆகி வருகிறது. இது ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கூட்டணி மட்டும் அல்ல. இந்திய நாட்டையும் 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்கான கூட்டணி” என்றார்.


”கவுண்டவுன் தொடங்கிவிட்டது"


தொடர்ந்து பேசிய அவர், "இது கட்சிகள் தங்கள் தேவைக்காக உருவாக்கிய கூட்டணி அல்ல; மாறாக, மக்கள் விருப்பத்தால் உருவாகி இருக்கிற மகத்தான அணி. எதிர்க்கட்சிகள் ஒன்றுபட மாட்டார்களா என ஏங்கிய இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக உருவாகி இருக்கிற அணி. மராட்டிய மக்கள் இந்த அணிக்கு இன்று பரிபூரணமான ஆதரவை தெரிவித்து இருக்கிறார்கள். இன்றைய கூட்டம், திருப்திகரமாக மட்டுமல்ல, திருப்புமுனையாகவும் அமைந்திருக்கிறது.  I.N.D.I.A  கூட்டணிக்கான ஆதரவும், எங்கள் மீதான எதிர்பார்ப்பும் நாட்டு மக்களிடையே நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.


பொய்களையும் அவதூறுகளையும் வெறுப்பையும் முதலீடாக வைத்து பா.ஜ.க நடத்திவரும் பாசிச ஆட்சியின் 'கவுண்டவுன்' ஆரம்பமாகி உள்ளது.  ஒன்பது ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் ஜனநாயகத்துக்குத் துளியும் மதிப்பில்லை. தற்போது அது இந்தியாவின் ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது. மக்களாட்சியில் தன்னாட்சி அமைப்புகளையும், மரபுகளையும் சிதைத்த அரசாக; தங்களது எதிரான கட்சிகளின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்த அரசாக மோடி  தலைமையிலான அரசு வரலாற்றில் பதியப்படும். அதற்கு மகாராஷ்ராவே சிறந்த சாட்சி" என்றார் முதல்வர் ஸ்டாலின்.


”இந்தியாவைக் காப்பாற்றுவதே இலக்கு"


மேலும், ”நரேந்திர மோடி என்கிற தனிநபரிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை பறிப்பது எங்கள் நோக்கம் அல்ல. யார் மீதும் தனிப்பட்ட வெறுப்போ வன்மமோ எங்களுக்கு இல்லை. மீண்டும் பா.ஜ.க.விடம் ஆட்சியைக் கொடுத்தால் நாம் பார்த்த இந்தியாவே இனி இருக்காது. அதனால் எதிர்க்கிறோம்.


தனித்தனி கட்சிகளாக இருந்தாலும் - தாய்நாடான இந்தியாவைக் காப்பாற்றுவது ஒன்றே எங்களது இலக்கு. அரசியல் லாபங்களுக்காக நாங்கள் அணி சேரவில்லை. இந்தியாவின் இறையாண்மையை, மாண்பை, மதச்சார்பின்மையை, சமூகநீதியை, சகோதரத்துவத்தைக் காப்பாற்றுவதற்காக சேர்ந்திருக்கிறோம். அந்த இலட்சியத்தை மக்கள் சக்தியோடு நாங்கள் வெல்வோம். பா.ஜ.க வீழ்த்த முடியாத சக்தி அல்ல. வெவ்வேறு மாநிலங்களில் தனித்தனியாக வீழ்த்தப்பட்ட கட்சிதான் பா.ஜ.க.


பா.ஜ.க முன்னெடுக்கும் வெறுப்பு அரசியலாலும், வகுப்பு மோதல்களாலும், தங்களுக்கு வேண்டிய பெருமுதலாளிகளுக்குத் துணைபோகும் செயலாலும் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறைந்திருக்கிறது. ஒரு நாடு ஒரு வரி, ஒரு நாடு ஒரு மொழி, ஒரு நாடு ஒரே கல்வி, ஒரு நாடு ஒரே தேர்தல், ஒரு நாடு ஒரே கட்சி என ஒற்றையாட்சியை  ஒற்றைக் கட்சி நாடாக இந்தியாவை மாற்ற நினைக்கும் பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது" என்றார் முதல்வர் ஸ்டாலின்.