ரயில்வே வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவராக ஜெய வர்மா சின்ஹாவை மத்திய அரசு இன்று நியமித்தது, ரயில்வே அமைச்சகத்தின் 166 ஆண்டுகால வரலாற்றில் அந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.  






அலகாபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான ஜெய வர்மா சின்ஹா, 1986 இல் இந்திய இரயில்வே போக்குவரத்து சேவையில் (IRTS) சேர்ந்தார். மேலும் வடக்கு இரயில்வே, தென்கிழக்கு இரயில்வே மற்றும் கிழக்கு இரயில்வே ஆகிய மூன்று இரயில்வே மண்டலங்களில் பணிபுரிந்தார். 


"அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) , இந்திய ரயில்வே மேலாண்மை சேவைகள் (IRMS), உறுப்பினர் (செயல்பாடுகள் மற்றும் வணிக மேம்பாடு), ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவிக்கு ஜெய வர்மா சின்ஹாவை நியமனம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது" என்று அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 






அனில் குமார் லஹோட்டிக்குப் பிறகு ஜெய வர்மா சின்ஹா ​​இன்று (செப்டம்பர் 1 ஆம் தேதி) பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 31, 2024 அன்று முடிவடைகிறது. ஜெய வர்மா சின்ஹா ​​அக்டோபர் 1 ஆம் தேதி  2024 ஆம் ஆண்டு ஓய்வு பெற உள்ளார், ஆனால் அவரது மீதமுள்ள பதவிக்காலத்திற்கு அவர் வேறு துறையில் மீண்டும் பணியமர்த்தப்படுவார் என கூறப்படுகிறது.


ஒடிசாவில் கிட்டத்தட்ட 300 பேரைக் கொன்ற மிக மோசமான பாலசோர் விபத்தை அடுத்து ரயில்வேயின் பொது முகமாக ஜெய வர்மா சின்ஹா ​​இருந்தார், அவர் ரயில்வேயில் சிக்கலான சமிக்ஞை முறை பற்றி ஊடகங்களுக்கு விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  


பங்களாதேஷின் டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் ரயில்வே ஆலோசகராக நான்கு ஆண்டுகள் பணியாற்றிய போது, ​​கொல்கத்தா மற்றும் டாக்காவை இணைக்கும் ரயில் சேவையான மைத்ரீ எக்ஸ்பிரஸின் தொடக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் ஜெய வர்மா சின்ஹா.