இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகளே தீர்மானிக்க உள்ளது. ஏற்கனவே, மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வரும் 13ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடக்க  உள்ளது.


"முஸ்லிம் லீக், மட்டன் குறித்து பேசும் பிரதமர் மோடி"


முதல் மூன்று கட்டங்களில் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. வரும் 13ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா உள்பட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.


தெலங்கானாவில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், மக்களவை தேர்தலில் குறிப்பிடத்தகுந்த தொகுதிகளை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த நிலையில், ஹைதராபாத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். கடந்த பத்தாண்டு ஆட்சி காலத்தில் எதுவும் செய்யாததால் முகலாயர்கள், முஸ்லிம் லீக், தாலி, மட்டன் ஆகியவற்றை பற்றி மோடி பேசி வருவதாக கார்கே விமர்சித்தார்.


"பொய்களை பரப்பும் மோடி"


தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "காங்கிரஸுக்கு தொழிலதிபர்கள் கெளதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி  டெம்போவில் பணம் அனுப்பும்போது பிரதமர் மோடி என்ன தூங்கி கொண்டிருந்தாரா? நீங்கள் குறிப்பிடும் தொழிலதிபர்களின் வீடுகளுக்கு சிபிஐ மற்றும் வருமான வரித்துறை குழுக்களை அனுப்புங்கள். அவருக்கு அந்தத் தகவல் கிடைத்திருந்தால், மத்திய விசாரணை அமைப்புகள் அவர்களின் வீடுகளில் சோதனை செய்யட்டும்.


இரு தொழிலதிபர்களும் அரசுக்கு சாதகமாக இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது மோடி அவர்களைப் பாதுகாத்து வந்தார். அவர் ஏன் இப்போது அவர்களைத் தாக்குகிறார். ஏன் பொய்களைப் பரப்புகிறார்.


குஜராத்திற்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சியடைய வேண்டும். அனைவருக்கும் முதலீடுகள் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், முதலீட்டாளர்களை குஜராத்திற்கு வரவழைத்து அங்கு முதலீடு செய்ய வேண்டும் என மோடி பயமுறுத்துகிறார் என்ற எண்ணம் நிலவுகிறது.


ஹைதராபாத்தில் முதலீடுகள் எதுவும் வரவில்லை. தெலுங்கானாவுக்கு எவ்வளவு திட்டங்கள் கிடைத்தன என்பதை பாஜக விளக்க வேண்டும். நேருவின் முயற்சியால் நாகார்ஜுனா சாகர் போன்ற திட்டங்களை உருவாக்கப்பட்டதாக காங்கிரஸ் பெருமையுடன் கூறலாம். மோடியால் தெலங்கானாவுக்கு இவ்வளவு பெரிய திட்டத்தை கொண்டு வர முடிந்தது என சொல்ல முடியுமா?


ஹைதராபாத்தை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் பரிந்துரைத்தார். இருப்பினும், அத்தகைய நகரம் மோடியால் புறக்கணிக்கப்பட்டுள்ளது" என்றார்.