நடிகை நமீதா இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தி.நகர் திருப்பதி பெருமாள் கோயிலில் சிறப்பு பிரார்த்தனைக்காக வருகை தந்தார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை நமீதா, தன் திருமணத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகி, அதிமுக பேச்சாளராக இருந்து, பின்பு தற்போது பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.


‘எல்லா இடத்திலும் பாஜக இருக்கும்’


இன்று நமீதா தன் 43ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், திருப்பதி பெருமாள் கோயிலுக்கு வந்து வழிபட்டதுடன் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்.


 “இன்று நான் என் பிறந்தநாளுக்காக தான் இங்கு வந்துள்ளேன். அரசியல் பற்றி பேச மாட்டேன். தாமரை மகாலட்சுமியுடைய சின்னம். இன்று அட்சயதிருதையை. மகாலட்சுமி, அம்மன் ஃபோட்டோவில் கண்டிப்பாக ஒரு தாமரை எப்போதும் இருக்கும். அதுதான் இப்போது என் கையில் உள்ளது.


நேற்று தான் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு தற்போது பிறந்தநாளுக்காக சென்னை வந்துள்ளேன். அடுத்து ஒடிசா, டெல்லி செல்லப்போகிறேன். ஒரு மாதம் நிறைய வேலை உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக கண்டிப்பாக பெரும்பான்மை வெற்றி பெறும். நம் நாட்டில் எல்லா இடத்திலும் பாஜக, பாஜக என இருக்கப்போகிறது” என்றார்.


பிரஜ்வல் ரேவண்ணா பற்றிய கேள்வி


தொடர்ந்து “பிரஜ்வல் ரேவண்ணாவால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நீங்கள் அதற்கு கண்டனம் தெரிவிக்கிறீர்களா? ஒரு பெண்ணாக எப்படி இந்த விவகாரத்தைப் பார்க்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ‘என்ன சொல்றீங்க?’ இந்த விவகாரம் பற்றி புரியாமல் விழித்த நமீதாவுக்கு அவரது கணவர் வீரேந்திர சௌத்ரி எடுத்துரைத்தார். 


அதனைத் தொடர்ந்து  “இப்போது நான் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கிறேன், அடுத்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக தான் வந்துள்ளேன். நாளை மறுநாள் மறுபடி பிரச்சாரம், யாத்திரைக்கு செல்ல உள்ளேன். இந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை” என பதிலளித்தார்.


தொடர்ந்து செய்தியாளர்கள் இந்த விவகாரம் பற்றி கேள்வி எழுப்ப, தன் கணவர் எடுத்துக் கொடுத்த பதிலை சொன்ன நமீதா. “அது தப்பா இருந்தால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும், நான் என்ன சொல்ல முடியும். இந்தக் கேள்விகளை நீங்கள் என்னிடம் கேட்கக்கூடாது. என் தலைவரிடம் கேட்க வேண்டும்” எனக் கூறி முற்றுப்புள்ளி வைத்து அங்கிருந்து திரும்பினார்.


பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளராக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நமீதா, நாட்டின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் பற்றி தெரியாமலும், பிரஜ்வல் ரேவண்ணா என்பவர் யார் என்று தெரியாதபடியும் விழித்தது பேசுபொருளாகியுள்ளது.


 



மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான எச். டி. தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அதை வீடியோவாக எடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.  


கர்நாடக மாநிலம், ஹாசன் தொகுதி எம்.பியான இவர் பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்களின் பென் டிரைவ் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றிருப்பது பிரச்னையை விஸ்வரூபம் எடுக்கச் செய்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு அமைத்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.