மைசூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பாஜக சார்பில் நடத்தப்பட்ட மெகா ரோட்ஷோவின்போது பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி மொபைல் போன் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்த நிலையில் அந்த மொபைல்ஃபோன் யாருடையது ஏன் வீசப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.


மோடியின் வாகனம் மீது மொபைல்ஃபோன் வீச்சு


கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் நின்று கொண்டு ரோட்ஷோ நடத்தும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் விடியோவில், பிரதமர் மோடி இருந்த வாகனத்தின் பானட்டின் மீது போன் ஒன்று வந்து விழுவதைக் காணமுடியும். விழுவதை கவனித்த பிரதமர் அவருடன் வந்திருந்த சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG) துருப்புக்களிடம் அது பற்றி குறிப்பிட்டார். பிரச்சாரத்திற்காக வந்திருந்த பிரதமர் மீது உற்சாகத்தில் மக்கள் பூக்களை தூவிக்கொண்டிருக்க திடீரென ஒரு போன் பறந்து வந்து வண்டியில் இடித்து பானட்டில் விழுந்தது.



பாதுகாப்பில் குறைபாடா?


இந்த சம்பவத்தில் பிரதமர் மோடி மீது செல்போன் படவில்லை என்றாலும் அவர் வாகனம் வரை ஒரு பொருளை தூக்கி வீசும் அளவுக்கு பாதுகாப்பு மோசமாக உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. போலீஸாரின் கூற்றுப்படி, இந்த மொபைல் போன் வீச்சில் எந்த ஒரு "தவறான எண்ணமும்" இல்லை என்று கூறப்பட்டுள்ளது. பிரதமரை பார்த்த உற்சாகத்தில் பூக்கள் தூவும்போது தவறுதலாக அவரது மொபைல்ஃபோன் பறந்துள்ளதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: Fact Check: பாலியல் வன்கொடுமையை தடுக்க கல்லறைக்கு பூட்டா? வைரலான புகைப்படத்தின் உண்மை பின்னணி என்ன?


தவறான எண்ணத்தில் வீசவில்லை


"பிரதமர் எஸ்பிஜியின் பாதுகாப்பில் இருந்தார். அந்த பெண் பாஜக தொண்டர் உற்சாகத்தில் தவறுதலாக மொபைல் போனை எரிந்துள்ளார். எஸ்பிஜியினர் விசாரித்துவிட்டு அந்த மொபைலை மீண்டும் அவரிடம் திருப்பிக் கொடுத்தனர்" என்று கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அலோக் குமார் பிடிஐயிடம் தெரிவித்தார். பிரதமர் தனது இரண்டு நாள் சூறாவளி பிரச்சார சுற்றுப்பயணத்தை கர்நாடகாவின் மைசூருவில் ஒரு மெகா ரோட்ஷோவுடன் முடித்தார். இந்த ரோட்ஷோ நகரின் பல்வேறு பகுதிகளை கடந்து சென்றது.



தவறுதலாக போன் கையைவிட்டு சென்றது


"பிரதமரைப் பார்த்த உற்சாகத்தில் பூக்கள் வீசும்போது தவறுதலாக மொபைல் போன் தூக்கி எறியப்பட்டது, அந்த பெண்ணுக்கு எந்த தவறான எண்ணமும் இல்லை. இருப்பினும் அந்த மொபைலை ஒப்படைப்பதற்காக நாங்கள் அந்த பெண்ணைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம், இறுதியாக தொலைபேசி SPG பாதுகாவலர்களால் அவளிடம் ஒப்படைக்கப்பட்டது," என்று அவர் மேலும் கூறினார். மைசூரின் பாரம்பரிய 'பேட்டா' மற்றும் காவி சால்வை அணிந்து, மைசூரு எம்.பி பிரதாப் சிம்ஹா, முன்னாள் அமைச்சர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா மற்றும் எஸ்.ஏ.ராமதாஸ் ஆகியோருடன் மோடி, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களை நோக்கி கை அசைத்துக்கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.